‘பெயரால் அல்ல; சேவைகளால் அறியப்பட்டவர் நேரு’ ராகுல் காந்தி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேசியத் தலைநகரில் உள்ள, ‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை’ (என்.எம்.எம்.எல்.) ‘பிரதமர் நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலகம்’ (பி.எம்.எம்.எல்.) எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘தனது கொள்ளுத் தாத்தா நேரு, பெயருக்காக அல்லாமல் அவர் செய்த பணிகளுக்காக அறியப்பட்டவர்’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் தில்லி விமான நிலையத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ‘நேருஜி அவரது பெயருக்காக அல்ல, அவரது சேவைக்காக அறியப்பட்டவர்’ என்று கூறினார்.

முன்னதாக, நேரு நினைவு அருங்காட்சியகத்தை, பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் எனப் பெயர் மாற்றுவது தொடர்பாக பாஜகவுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் வார்த்தைப் போர் நடந்தது. ‘தலைநகர் தில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் பங்கு மற்றும் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைகளை யாரும் பறித்துவிட முடியாது’ என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (X) வெளியிட்டுள்ள செய்தியில். ‘இன்று முதல் ஒரு புகழ் பெற்ற நிறுவனம் புதிய பெயரைப் பெறுகிறது. உலகப் புகழ் பெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இனி பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரதமராகவும், நீண்டகாலம் பிரதமராக இருந்தவருமான நேருவின் பெயரைக் கேட்டாலே தற்போதுள்ள பிரதமர் மோடிக்கு அச்சமும், குழப்பமும், பாதுகாப்பு இன்மையும் ஏற்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு மற்றும் நேருவின் பாரம்பரியத்தை மறுப்பது, சிதைப்பது மற்றும் அவதூறு செய்வதிலேயே மோடி குறியாக இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்று பெயர் மாற்றப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகக்குழு துணைத்தலைவர் சூரிய பிரகாஷ் கூறுகையில், ‘புதிதாக பெயரிடப்பட்ட அருங்காட்சியகத்தில் ஜவாஹர்லால் நேருவின் சாதனைகள், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் உள்ளிட்டவை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக சந்தேகம் உள்ளவர்கள் அருங்காட்சியகத்துக்கு நேரில் வந்து பார்வையிடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்துக்கு வரும் எவரும் நேரு, அவரது நவீன இந்தியா, ஹீராகுட் அணை, நாகார்ஜுனசாகர் அணை, அவரது யோசனையில் உருவான தொழில்நுட்ப பயிலகங்கள், திட்டக்கமிஷனில் அவர் ஆற்றிய பணி என பிரதமராக அவர் பதவி வகித்த 17 ஆண்டுகளின் சிறப்பான பணி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறினார்.

இந்த நிலையில் ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சியினர் ஜவாஹர்லால் நேரு மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மற்றும் ஜெய்ராம் ரமேஷ் சிந்தனைக்கும், பிரதமர் மோடியின் சிந்தனைக்கும் வேறுபாடுகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியினர் நேருஜி மற்றும் அவரது குடும்பத்தினரை மட்டுமே நினைக்கிறார்கள். பிரதமர் மோடி அனைத்து பிரதமர்களுக்கும் மரியாதையை வழங்கியுள்ளார்’ என்று கூறினார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சரும் ‘நேரு அருங்காட்சியகம் மற்று நூலக’ கலாசார சங்கத்தின் துணைத் தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்துக்கு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் எனப் பெயர் மாற்றம் குறித்த முடிவு செய்யப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com