

படித்து முடித்தவுடன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. அதிலும் அரசு வேலையைப் பெற போட்டித் தேர்வுக்காக படிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளை லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர். அதேபோல் இந்திய அளவில் ரயில்வே துறையிலும் ஆண்டுதோறும் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு பயின்று வரும் இளைஞர்கள் பலரும், ரயில்வே வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வதில்லை. ஆனால் ரயில்வே வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்தால், ரயில்வே துறையில் மத்திய அரசு வேலை கிடைக்கும்.
இந்நிலையில் தற்போது 1,20,579 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர், “ரயில்வே சேவைகளை விரிவாக்கம் செய்தல், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் ஓய்வு பெறுதல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அப்டேட் செய்தல் உள்பட சில காரணங்களால் ரயில்வே துறையில் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் ரயில்வே வாரியம் மூலம் அவ்வப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத டெக்னீசியன், பாராமெடிக்கல், அசிஸ்டன்ட் லோகோ பைலட், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் டிராக் மெயின்டனன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 92,116 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. மேலும் 2024 மற்றும் 2025 ஆகிய 2 ஆண்டுகளில் 1.20 லட்சம் ரயில்வே காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உள்ளது.
கடந்த வாரம் செப்டம்பர் 28 ஆம் தேதி 59,678 பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான முதல் கட்டத் தேர்வு நடைபெற்றது. இதுதவிர இன்னும் 28,463 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.
ரயில்வே தேர்வு நாடு முழுவதும் நடைபெறுவதால், இதற்கு மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. பல மொழிகளில் வினாத்தாள்களை தயார் செய்து மற்றும் தேர்வு மையங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
ஆனால் தேர்வுகள் எதுவும் கால தாமதமாக நடத்தப்படவில்லை. மேலும் ரயில்வே தேர்வுகளில் எவ்வித குளறுபடியும் நடக்கவில்லை என்றும், தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெறுகின்றன என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.