
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தான் மிகப் பிரபலமாக உள்ளன. இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ஷேர்சாட் என பல செயலிகள் ரீல்ஸ் வீடியோக்களுக்கான முக்கிய தளங்களாக உள்ளன. இந்நிலையில் ரயில் நிலையங்களில் ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி ரீல்ஸ் எடுப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இளம் தலைமுறையினர் பலரும் செல்லும் இடங்களில் எல்லாம் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வருகின்றனர். ஒருசிலர் ஆபத்தான பகுதிகளுக்குச் சென்றும் ரீல்ஸ் எடுக்கின்றனர். இதனால் சிலர் உயிரிழந்த சம்பங்களும் நாட்டில் நடந்துள்ளன. இருப்பினும் ரீல்ஸ் மோகம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. கோயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் செல்லும் பல பகுதிகளை ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பகுதிகளாகவே இன்றைய இளைஞர்கள் பார்க்கின்றனர். ரயில் நிலையங்களில் இளம் தலைமுறையினர் ரீல்ஸ் எடுப்பது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
புகார்களின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்போருக்கு ரூ.1,000 அபராதத்தை விதித்துள்ளது ரயில்வே நிர்வாகம். தேவைப்பட்டால் ரீல்ஸ் எடுப்பவர்களின் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறுகையில், “ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு உள்ளது. இளைஞர்களின் இந்த செயல்பாட்டால் பயணிகள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். மேலும் உயிருக்கு ஆபத்தான முறையில் சிலர் ரீல்ஸ் வீடியோக்களை எடுக்க முயற்சி செய்வதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. ரயில்வே விதிகளின் படி புகைப்படங்கள் எடுக்க அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் வீடியோ எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை.
ரயில்வே நிர்வாகத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் யாரேனும் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்தால், அவர்களின் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சிசிடிவி கேமராக்கள் மூலம் ரீல்ஸ் எடுப்போரை ரயில்வே அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் ரீல்ஸ் எடுப்போரை தீவிரமாக கண்காணிக்க ரயில்வே காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர தண்டவாளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கப்படுகிறதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”.