எலும்பு உடையாத வரை குற்றம் கிடையாது- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்..!

ஆப்கானிஸ்தானில் குடும்ப வன்முறையில் பெண்களை ஆண்கள் அடிக்க தாலிபான் அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
தாலிபான்
தாலிபான்
Published on

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் ஆட்சியில் பொறுப்பேற்றதில் இருந்து தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் நாட்டின் நடைமுறையில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முதல் பொது வெளியில் நடமாடும் சுதந்திரம் மற்றும் பொது வாழ்வில் பங்கேற்பது வரை அனைத்தையும் பறிக்கும் டஜன் கணக்கான ஆணைகளை தாலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.

பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொதுக் குளியலறைக்கு செல்லவும், பொது இடங்களில் முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் அல்லது வீட்டின் அருகில் பெண்கள் உரக்கப் பேசவோ அல்லது பாடவோ கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தனியாக வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் படிப்பதற்கும் கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறாம் வகுப்புக்குப் பிறகு பெரும்பாலான ஆப்கானியப் பெண்கள் முறையான கல்வியை முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தாலிபான்கள் பெண்களை மனிதர்களாகவே மதிப்பது இல்லை – வேதனையில் மலாலா!
தாலிபான்

வறுமை, பாதுகாப்பு கவலைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சமூக விதிமுறைகள் காரணமாக கிட்டத்தட்ட 30 சதவீத பெண்கள் ஆரம்பப் பள்ளியைத் தொடங்குவதில்லை, அதே நேரத்தில் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.

அதாவது பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளை நிராகரித்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இப்படி தாலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்துள்ளனர். 12 வயதிற்கு மேல் பெண்களுக்குக் கல்வி கற்கத் தடை விதித்துள்ள உலகின் ஒரே நாடு இதுவாகும்.

தற்போது பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கியுள்ளது தாலிபான் அரசு. அதாவது குடும்ப வன்முறையில் குடும்ப ஆண்கள் தங்களது மனைவி அல்லது குழந்தைகளை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி, ஒரு ஆண் தனது வீட்டில் உள்ள பெண்ணையோ அல்லது குழந்தையையோ தாக்கும்போது, இரத்தம் வராமலோ அல்லது எலும்பு முறிவு ஏற்படாமலோ இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது என்று கூறுகிறது. இதுகுறித்த 90 பக்க குற்றவியல் சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கு ஆளும் தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ளார்.

அதாவது, வெளிப்படையான காயங்கள் இல்லாதவரை எவ்வளவு வேண்டுமானாலும் வன்முறையில் ஈடுபடலாம். தண்டிக்கப்படும் நபரைப் பொறுத்து தண்டனையும் மாறுகிறது. அதாவது ஆபாசமான வன்முறை சம்பவங்களில் ஒருவேளை கணவர் தாக்கியதில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, அதை அந்த பெண் நீதிமன்றத்தில் ஆணின் துஷ்பிரயோகத்தை வெற்றிகரமாக நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஆண் குற்றவாளி என அறிவிக்கப்படுவதுடன், கணவருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமானால், கண்டிப்பாக அவரது கணவர் அல்லது ஒரு ஆண் உதவியாளர் வர வேண்டும். மேலும், நீதிபதியிடம் தனது காயங்களைக் காட்டும்போது கூட உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் புதிய சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருமணமான ஒரு பெண் தனது கணவரின் அனுமதியின்றி உறவினர்களைச் சந்தித்தால், வன்முறையிலிருந்து தஞ்சம் கோரும்போது உட்பட, மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படவும் புதிய சட்ட விதிமுறைகள் அனுமதிக்கின்றன.

பெயர் சொல்ல விரும்பாத ஒரு சட்ட ஆலோசகர் கூறும்போது, தாலிபான் சட்டத்தின் கீழ் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் நீதி பெறுவதற்கு ‘மிக நீண்ட மற்றும் கடினமான‘ செயல்முறையை எதிர்கொள்கிறார்கள் என்று கூறினார். சிறையில் தனது கணவரைச் சந்திக்கச் சென்றபோது ஒரு பெண் தாலிபன் காவலரால் தாக்கப்பட்ட சமீபத்திய வழக்கை அவர் மேற்கோள் காட்டினார்.

பெண்கள் தங்களுக்கு நடக்கும் எந்த ஒரு தாக்குதலுக்கும் எந்த நீதியும் பெறுவது சாத்தியமற்றது.

புதிய சட்டத்தின் 9-வது பிரிவின்படி, ஆப்கான் சமூகம் மதத் தலைவர்கள், உயர்குடி, நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு குற்றத்திற்கான தண்டனை, குற்றவாளி எந்தச் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

அவர்களில் மதத் தலைவர்கள் மற்றும் உயர்குடி மக்கள் தவறு செய்தால் அவர்களின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு தண்டனை அமையும். அதாவது அவர்களுக்குத் தனியாக அறிவுரை கூறுவது, மென்மையாக நினைவூட்டுவது அல்லது எச்சரிக்கை செய்வது மட்டுமே போதுமானது.

அதேசமயம் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள் தவறு செய்தால் அதே குற்றத்திற்காக அவர்கள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது கடுமையான உடல் ரீதியான தண்டனைகளைப் பெறலாம்.

தாலிபான்களின் இந்த பாரபட்சமான தண்டனை, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அடிப்படை மனித உரிமை விதிகளை மீறுவதாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
தாலிபான் தலையீடு – தவிடுபொடியாகும் மகளிர் விளையாட்டு!
தாலிபான்

2009-ம் ஆண்டு பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு (EVAW) சட்டம் உட்பட முந்தைய சட்டப் பாதுகாப்புகளை சட்டங்களை இந்த புதிய சட்டம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com