ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை என்று அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு பலவகையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பெண்களின் அடிப்படை விஷயங்களுக்கே தடை விதிக்கப்பட்டது. பெண்களின் சுதந்திரமும், பெண் மீதான அடக்குமுறையும்தான் அதிகரிக்கத் தொடங்கியது. பெண்கள் கல்வி கற்கும் உரிமையில் தொடங்கி, உடை உடுத்துவது, பேச்சுரிமையில் வந்து நிற்கிறது.
சென்ற ஆண்டு இயற்றப்பட்ட சட்டங்களின்படி பெண்கள் தங்களின் முகத்தை காட்டவும், பொது இடங்களில் சத்தமாக பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.
முதலில் தாலிபான் ஆட்சியை பிடித்த புதிதில் நாங்கள் அவ்வளவு கடுமையாக நடந்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில், நாட்கள் போக போக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. இது உலக நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட உலக சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி இருக்கக்கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படியான நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா இதுகுறித்து பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ‘இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் கல்வி நிலை’ தொடர்பான மாநாட்டில் பங்கேற்று மலாலா பேசினார்.
அப்போது தாலிபான்களால் அடக்குமுறைக்கு ஆளாகும் பெண்களையும் சிறுமிகளையும் முற்றிலும் பொது வாழ்வுகளில் இருந்து அகற்ற அவர்கள் திட்டமிட்டதுபோல் தெரிகிறது என்று கூறினார். மேலும், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான தலிபான்களின் அடக்குமுறையைக் கண்டித்து இஸ்லாமிய தலைவர்கள் அணிதிரள வேண்டுமெனவும் மலாலா வலியுறுத்தினார்.
பெண்கள் உரிமைக்காக போராடிய மலாலா தாலிபான்களை எதிர்த்து பள்ளிக்குச் சென்றார். ஒரு சிறு கிராமத்தில் பிறந்து துணிச்சலுடன் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்த மலாலா எவ்வளவோ தடைகளை மீறி, தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தற்போது மீண்டும் ஆஃப்கானிஸ்தான் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஆதரவாக, தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.