இனி நாடாளுமன்றத்தில் சிறு தானிய உணவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சாப்பாட்டு மெனுவில் சிறுதானிய உணவு வகைகளை சேர்த்து புதிய மெனுவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார். இதனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக சிறுதானியங்கள் அடங்கிய உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் கேப்பை தோசை(ராகி தோசை), கேப்பை தட்டை இட்லி, சோளம் மற்றும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புமா, சிறுதானிய கிச்சடி, ராகி லட்டு, குதிரைவாலி வகை உணவுகள், ராகி பூரி மற்றும் கேசரி கீர் உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் புதிய உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பி க்களுக்கு பரிமாறப்படும் உணவு தொடர்பான மெனுவை சபாநாயகர் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீ 20 உச்சி மாநாடு இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அரசின் சார்பில் சிறுதாணியங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் பல முன்னெடுப்புகளை இந்திய அரசு செய்து வருகிறது.
சிறு தானிய உணவு குறித்து 97வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ”இந்தியாவால் முன்மொழியப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு ஆகியவற்றை இந்த ஆண்டு கடைப்பிடிக்கும் முடிவை, ஐ.நா. சபை எடுத்து உள்ளது.
இதனால், ஒரு புரட்சி வர இருக்கிறது. மக்கள் பெருமளவில் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக யோகா மேற்கொள்வது மற்றும் கட்டுடலுடன் இருப்பது ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதேபோன்று, சிறுதானியங்களையும் தங்களது வாழ்வில் பெரிய அளவில் அவர்கள் ஏற்று கொண்டுள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 200 க்கும் மேற்ப்பட்ட நகரங்களில் ஜீ 20 மாநாடுகள் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஜீ 20 மாநாட்டுக் கூட்டத்திலும் சிறுதாணிய உணவுகளை அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதேபோல ஒடிசாவில் உள்ள சுந்தர்கார் என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் பிஸ்கட்டுகள், கேக்குகள், குக்கீகள், ரசகுல்லா, குலாப் ஜாமூன் உள்ளிட்ட பிற திண்பண்டப் பொருட்களை சிறுதானியங்களில் இருந்து உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.