

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கவும், நேரில் சந்திக்க அனுமதி கோரவும் ஏதுவாக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில் திமுக, அதிமுக என்ற மாபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, மக்களின் அமோக ஆதரவை பெற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அன்றே முதலமைச்சருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 16-ம்தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு தவெக அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த இரு நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து என 25 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கான இலாக்காக்களும் ஒதுக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், அவருடன் சேர்த்து மொத்தம் 33 அமைச்சர்கள் தங்களின் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
தவெக விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை உண்மையாக்குவது போல் டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை என்று மக்களுக்கு தேவையானதை விஜய் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.
இதற்கிடையே பொதுமக்கள் இனிமேல் தங்கள் குறைகளை 1100 என்ற கட்டணமில்லா உதவி எண் வாயிலாகவோ அல்லது cmhelpline@tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ தமிழக முதலமைச்சரிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசுவதற்காக அனுமதி பெற office.tncm@gmail.com என்ற இ-மெயில் முகவரியை தொடர்புகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், கோரிக்கை மனுக்கள் அனுப்ப Cmo@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்றும் துறைகள் சார்ந்த கடிதப் போக்குவரத்திற்கு Tncmosection2026@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அணுக வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் நிர்வாகத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தத் தகவல் தொடர்பு முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.