

தமிழக சட்டசபைக்கு தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெகவின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.
கடந்த 3 நாட்களாக தமிழக அரசியல் களத்தில் நீடித்த பரபரப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தவெகவிற்கு இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்த நிலையில் கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக தனது உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். முதல் கையெழுத்தாக, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான சிறப்புக் குழு, போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பிரிவு மற்றும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய், வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவர், பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார். அதிலும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாக தவெக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து ஒவ்வொரு நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் (Singappen Special Force SSF) சேலம் மாநகராட்சியில் கடந்த மே 13ந் தேதி முதல் தொடங்கியதுடன் முதற்கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண் காவலர்கள் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரடியாகப் புகார் அளிக்க முதல்வரின் முகவரி (CM Helpline) இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இனிமேல் தங்கள் குறைகளை 1100 என்ற கட்டணமில்லா உதவி எண் வாயிலாகவோ அல்லது cmhelpline@tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ நேரடியாகத் தெரிவிக்கலாம்.
'CM Helpline TN' என்ற ஆண்ட்ராய்டு அல்லது iOS மொபைல் செயலியைப் பயன்படுத்திப் புகாரளிக்கலாம்.
அதற்கு முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
பின்னர் நீங்கள் புகார் அளிக்க உள்ள துறையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் புகாரைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தான்.
பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.