
இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை மேலும் எளிமையாகவும், குறைந்த விலையிலும் கொண்டு சேர்க்கும் நோக்கில், அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மற்றும் இந்திய அஞ்சல் துறை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த முயற்சி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் அஞ்சல் துறைகளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா முழுவதும் உள்ள 1.65 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் நிலையங்கள், பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் மற்றும் மொபைல் ரீசார்ஜ் வசதிக்கான விற்பனை மையங்களாக செயல்படும்.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் பெரும்பாலும் இணைப்பு வசதிகள் குறைவாகவே இருக்கும். இந்த சேவை மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், நகரங்களுக்கு செல்லாமலேயே அல்லது நீண்ட தூரம் பயணிக்காமலேயே சிம் கார்டுகளை வாங்கிக்கொள்ளவும், தங்கள் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்துகொள்ளவும் முடியும். மேலும், இந்த கூட்டாண்மை, டிஜிட்டல் இந்தியா, நிதி உள்ளடக்கம் மற்றும் பரந்த சமூக-பொருளாதார மேம்பாடு போன்ற தேசிய இலக்குகளை அடையவும் உதவும்.
அஞ்சல் துறையின் விரிவான வலையமைப்பு கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்தையும், கிராமத்தையும் உள்ளடக்கியிருப்பதால், பிஎஸ்என்எல் சேவைகளுக்கான விற்பனை மையங்களாக அவை செயல்படும். அஞ்சல் நிலையங்களை சேவை மையங்களாகப் பயன்படுத்துவதன் மூலம், பிஎஸ்என்எல் தனது கடைசி மைல் சேவையை (last mile reach) குறிப்பிடத்தக்க அளவில் பலப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான முன்னோடி செயல்பாடு அசாமில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இத்திட்டம் நல்ல பலன்களைக் காட்டியது. இந்த வெற்றிகரமான சான்றின் அடிப்படையில், இந்தத் திட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அஞ்சல் நிலையங்கள் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான விநியோக மற்றும் வாடிக்கையாளர் சேர்க்கை மையங்களாக சிறப்பாக செயல்பட முடியும் என்பதை இந்த முன்னோடி செயல்பாடு நிரூபித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒப்பந்தத்தின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் சிம் கார்டுகளை வழங்கும் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கும்.
இந்திய அஞ்சல் துறை புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குவது ஆகியவற்றை நிர்வகிக்கும். அஞ்சல் நிலையங்கள் சிம் கார்டுகள் வழங்குதல் மற்றும் ரீசார்ஜ் சேவைகள் என இரண்டுக்கும் விற்பனை மையங்களாக செயல்படும். இந்த ஏற்பாடு, பொதுமக்களுக்கு ஒரு கூடுதல் சேவை வாய்ப்பை வழங்குவதோடு, பிஎஸ்என்எல் தனது சந்தை இருப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.