விண்வெளிக்கு செல்லப் போகும் ஏஐ ரோபோ..! உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் இஸ்ரோ..!

ISRO - AI Robot
AI Robot
Published on

ஏஐ தொழில்நுட்பம் தற்போது உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், விண்வெளியிலும் சாதனைப் படைக்க காத்திருக்கிறது. இந்தியாவின் சக்தியை விண்வெளியில் நிரூபித்து வரும் இஸ்ரோ, அடுத்த சில ஆண்டுகளில் என்னென்ன செய்யவுள்ளது என்ற பட்டியலை தயாராக வைத்துள்ளது. இதன்படி ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான மனித வடிவிலான ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுதவிர சந்திராயன்-4 திட்டத்திலும் ஏஐ ரோபோவை பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாடு கோவையில் உள்ள நேரு கல்விக் குழுமத்தில் நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் நாராயணன் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் வெகு விரைவில் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மனித வடிவிலான ரோபோவை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இஸ்ரோ தற்போது மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் முடிந்து விட்டன. இந்நிலையில் மீதமுள்ள பணிகளை முடித்து விட்டு, அனைத்தையும் சரிபார்த்த பிறகு 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். ராக்கெட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உடன் செல்லும் மனிதர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்படும். அதோடு இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆளில்லாத 2 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம்.

உலகளவில் விண்வெளித் துறையில் இந்தியா முதன்மையான நாடாக விளங்குகிறது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பூமியில் மட்டுமின்றி விண்வெளிக்கும் சென்று விட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வயோமித்ரா எனும் மனித வடிவ ரோபோவை உருவாக்கி வருகிறோம். விரைவில் இந்த ரோபோவை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறோம். இதுமட்டுமின்றி சந்திராயன்-4 திட்டத்திலும் ஏஐ தொழில்நுட்ப ரோபோவை பயன்படுத்த உள்ளோம். இதன்படி நிலவின் மாதிரிகளை ஏஐ ரோபோ பூமிக்கு எடுத்து வரும். நிலவில் உள்ள கேமராக்களில் மிகச் சிறந்தது இந்தியாவின் கேமரா தான்.

செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் அனுப்புவது முதல் ராக்கெட் என்ஜின் வரை இந்தியா முதன்மை நாடாகத் திகழ்கிறது. நம்முடைய நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமுடன் இருப்பதால், வருங்காலத்திலும் விண்வெளித் துறையில் இந்தியா சிறந்து விளங்கும்” என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பாலைவனத்தில் செயற்கை மழை..! ஏஐ செய்த அற்புதம்..!
ISRO - AI Robot

விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகள் அளவிட முடியாதவை. இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம். ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் புகழ் பெற்று வரும் நிலையில், விரைவில் விண்ணுலகையும் ஆட்சி செய்யப் போகிறது. உலக நாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை செய்து வரும் நிலையில், இந்தியாவின் வயோமித்ரா ரோபோ உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏஐ வகுப்பு ரெடி..! ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கு..!
ISRO - AI Robot

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com