
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிகம். ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில் அதன் விலை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே செல்கிறது. புதுப்புது மாடல்கள் சந்தைக்கு வரும்போது ஏற்கனவே இருந்த பழைய மாடல்களின் விலை குறைந்து விடுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களை பணம் கொடுத்து வாங்குவதை காட்டிலும் சந்தா செலுத்தி பயன்படுத்தும் ஒரு புதிய முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது BytePe எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம்.
பொதுவாக ஓடிடி தளங்களில் தான் சந்தா செலுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை பார்க்க முடியும். அதேபோல் தற்போது ஸ்மார்ட்போனையும் சந்தா முறையில் பயன்படுத்திக் கொள்ளும் புதிய வசதி தொழில்நுட்ப உலகில் சாத்தியமாகியுள்ளது. இதன்படி BytePe இணையதளத்தில் நீங்கள் விரும்பும் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுத்து, சந்தா செலுத்தி குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் இந்த சந்தாவை நீட்டித்துக் கொள்ளலாம் அல்லது வேறொரு ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுத்து சந்தா செலுத்தி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதியில் மிகவும் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் இந்த இணையதளத்தில் ஐபோன்களையும் சந்தா முறையில் பயன்படுத்த முடியும். இந்தியாவில் ஒன்பிளஸ், சாம்சங், ரியல்மீ, மோட்டோரோலா, ஆப்பிள், லாவா மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் தங்கள் மொபைல்போனை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனங்கள் அவ்வபோது புதுப்புது அப்டேட்டுகளுடன் மொபைல்போன்களை சந்தையில் வெளியிடுகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களால் அவ்வபோது மொபைல்போன்களை மாற்றுவது கடினம். ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய பிறகு, இன்னும் சிறிது காலம் கழித்து வாங்கி இருந்தால் வேறொரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கி இருக்கலாமோ என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுகிறது. இந்த எண்ணத்திற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக இனி சந்தா முறையில் மொபைல் போன்களை பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது BytePe எனும் நிறுவனம்.
இதன்படி சந்தா செலுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் விரும்பிய போனை பயன்படுத்த முடியும். சந்தா முடிந்த பிறகு அதே போனை பயன்படுத்த விரும்பினால் சந்தாவை நீடித்துக் கொள்ளலாம் அல்லது வேறொரு போனை பயன்படுத்த விரும்பினால் அதற்கும் இந்நிறுவனம் நமக்கு வாய்ப்பளிக்கிறது. BytePe எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் முதலில் ஸ்மார்ட்போன்களை சந்தா முறையில் செலுத்த முன்வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கான வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்து பல மின் சாதனங்களை சந்தா முறையில் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச சந்தாவாக 12 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பயன்பாட்டு வசதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மேலும் இதில் டேமேஜ் புரொடக்ஷன் அம்சமும் உள்ளது.
BytePe தளத்தில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் சீரிஸ் 17 என்ற ஸ்மார்ட்போனும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒரு மாதத்திற்கு ரூ.3,455 என்ற சந்தா கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவை தற்போது டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வெகுவிரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.