

1965-இல் அமெரிக்காவின் அணுசக்தி ஜெனரேட்டர் ஒன்று இமயமலையில் தொலைந்துபோனது என்ற தகவல் உலகப்புகழ்பெற்ற இதழான நியூயார்க் டைம்ஸில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது. அதன்படி, 1965-ம் ஆண்டு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் இந்தியப் புலனாய்வுத் துறை இணைந்து மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின்போது, இமயமலையின் நந்தாதேவி சிகரத்தில் புளூட்டோனியம் நிரப்பப்பட்ட அணுசக்தி ஜெனரேட்டர் ஒன்று தொலைந்துபோனது.
சீனா அணு ஆயுதங்களை உருவாக்குகிறதா என்பதைக் கண்காணிக்க, அதன் ஏவுகணை ரேடியோ சமிக்ஞைகளை உளவு பார்க்க ஒரு கண்காணிப்பு சாதனத்தை நிறுவுவதே இந்த ரகசியப் பயணத்தின் நோக்கம்.
அதற்காக இந்திய மற்றும் அமெரிக்க மலையேற்ற வீரர்கள் ஒரு ஆண்டெனா, கேபிள்கள், SNAP-19C எனப்படும் புளூட்டோனியம் நிரப்பப்பட்ட அணுசக்தி ஜெனரேட்டர் மற்றும் வேவுபார்க்கும் கருவிகளோடு இமயமலை தொடரில் உள்ள நந்தாதேவி சிகரத்தின் உச்சியில் அணுமின்சாரத்தில் இயங்கும் உளவு பார்க்கும் கருவியை பொருத்த திட்டமிட்டன.
ஆனால், எதிர்பாராத பனிப்புயலால், மலையேறியவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல், ஒரு பனிக்கட்டி விளிம்பில் அந்த கருவியை மறைத்து வைத்துவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவசரமாகக் கீழே இறங்கினர். அவர்கள் திரும்பியபோது, பனிச்சரிவு காரணமாக அந்தச் சாதனம் இருந்த பனிப்பாறை உடைந்து, ஜெனரேட்டர் காணாமல் போயிருந்தது. அது இன்றுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சீனாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை உளவு பார்க்கும் நோக்கில் பொருத்தப்பட்ட இக்கருவியின் மின்தேவைக்காக புளூட்டோனியம் என்ற மிக ஆபத்தான கதிர்வீச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உளவு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அப்போது மறைத்து வைக்கப்பட்ட அணுமின் உற்பத்தி சாதனம், பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு, இன்றுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதில் இருந்த புளூட்டோனியம் வெளிப்படுத்தும் வெப்பம் தான் பனி அதிகளவில் உருக காரணமாகி வெள்ளம் போன்ற பிரச்சனைகளுக்கு வித்திடுகிறா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் 60 ஆண்டுகளாகப் பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்திருக்கும் இந்த புளூட்டோனியம் கலந்த கதிர்வீச்சு சாதனம், பனிப்பாறைகள் உருகும்போது, கங்கை ஆற்றின் நீராதாரங்களில் தூய்மைக்கேடு ஏற்படுத்தி, பல கோடி மக்களுக்கு கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் எச்சரிக்கிறது. மேலும் இது தவறான கைகளுக்கு சென்றால் இதை பயன்படுத்தி அணுகுண்டு கூட செய்யலாம் என்றும் அதை அமெரிக்கா தேடி எடுத்துச்சென்று விட வேண்டும் என்றும் பாஜக எம்பி நிஷிகாந்தூபே வலியுறுத்தியுள்ளார்.
இந்த கருவியை தேடி வெளியே எடுத்து அச்சம் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் அமைச்சர் சத்பால் மகாராஜ் கூறியுள்ளார். உளவுத்துறை தொடர்பான விவகாரங்கள் என்பதால் இதுகுறித்து இருநாட்டு அரசுகளும் எதுவும் கூறாமல் அமைதி காக்கின்றன. ஆனால், இமயமலைக்குள் உண்மையில் ஒரு அணுசக்தி கருவி புதைந்துள்ளதா, அது தான் இயற்கை பேரழிவுகளுக்குக் காரணமா என்ற கேள்வி இப்போது மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
இந்த ரகசியம் 1978-ம்ஆண்டு வரை புதைந்து கிடந்த நிலையில், ஹோவர்ட் கோன்(Howard Kohn) என்ற இளம் நிருபர் இந்த கதையை கண்டுபிடித்து அதை Outside பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.