
உலகிலேயே மிகப்பெரிய மலைத்தொடராக இமயமலை உள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாள், பூட்டான், சீனா, பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளில் இமயமலை தனது எல்லையை பரப்பி உள்ளது. பூமியின் மிக நீளமான மலைத் தொடர்களையும் உலகின் 14 உயரமான சிகரங்களையும் கொண்டுள்ளன. இங்கு உற்பத்தி ஆகும் 19 நதிகள் 60 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இமயமலை இந்திய துணைக் கண்டத்தையும் யூரேசியாவையும் பிரிக்கிறது, பல நாடுகளின் இயற்கை அரணாகவும் உள்ளது.
மத்திய ஆசியாவில் இருந்து வரும் கடும் குளிர்காற்றை தடுத்து நம்மை பாதுகாக்கிறது. இந்தியாவின் காலநிலைக்கு இமயமலை முக்கிய பங்கு வகிக்கிறது. இமயமலைத் தொடர் இந்திய துணைக் கண்டத்திற்கும் திபெத்திய பீடபூமிக்கும் இடையில் 2500 கி.மீ நீளத்தில் உள்ளது. இன்றும் கூட இமயமலை வளர்ந்து வருகிறது, நகர்ந்து வருகிறது என்று கூறினால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.
இமயமலை தோற்றம்:
சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்ட்வானாலாண்ட் என்ற மிகப்பெரிய கண்டம் இருந்தது. அதில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, மடகாஸ்கர் மற்றும் இந்தியா ஆகியவை இணைந்திருந்தன. 250-65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவை தனித்தனியாக பிரிந்து சென்றது. சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து பிரிந்த ஒரு நிலப்பரப்பு கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது.
அந்த நேரத்தில், இந்தியா டெதிஸ் பெருங்கடலில் ஒரு தீவாக இருந்தது. அடுத்த 85-90 மில்லியன் ஆண்டுகளில், இந்தியா மடகாஸ்கரில் இருந்து பிரிந்து வடகிழக்கு நோக்கி ஆண்டுக்கு 18-19 செ.மீ வேகத்தில் நகர்ந்து யூரேசிய கண்டத்தில் இறுதியாக சேர்ந்தது.
இரண்டு கண்ட மோதலில் நடுவில் ஒரு புதிய புவியியல் அமைப்புகள் தோன்றின. புவியில் உள்ள டெக்டோனிக் தகடுகள் ஒன்றை ஒன்று அழுத்தத் தொடங்கின. இந்த அழுத்தத்தின் காரணமாக நடுவில் மேடான நிலப்பகுதி உருவாக ஆரம்பித்தது. சுமார் 50-60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தட்டின் வடக்கு நோக்கிய முன்னேற்றம் ஆண்டுக்கு 4-6 செ.மீ என்ற அளவில் குறைந்துபோனது. புவியியல் அடுக்கில் உள்ள தகுதிகள் தொடர்ச்சியான மோதலில் கீழிருந்த நிலப்பரப்புகள் மேல் நோக்கி எழும்ப தொடங்கின.
டெக்டோனிக் இயக்கம்:
பல்வேறு ஒழுங்கற்ற மற்றும் மிகப்பெரிய நொறுக்கப்பட்ட பாறைத் துண்டுகளால் ஆனவை டெக்டோனிக் தகடுகள். 15-20 நகரும் டெக்டோனிக் தகடுகளைக் கொண்டவை லித்தோஸ்பெரிக் தகடுகள் என்றழைக்கப்படுகின்றது. லித்தோஸ்பியருக்குக் கீழே உள்ள ஒரு நெகிழ்வான அடுக்காக எஸ்தெனோஸ்பியர் உள்ளது.
இங்கு வெப்பச்சலன நீரோட்டங்கள் பலவீனமான பாறைகளை உருக்கி, சூடான வாயுக்கள் மற்றும் திரவங்களை உருவாக்குகின்றன. குளிர்ந்த மற்றும் அடர்த்தியான திரவங்கள் மற்றும் வாயுக்கள், வெப்பமான திரவங்களின் மேல்நோக்கிய இயக்கத்தால் இடம் பெயர்கின்றன. அங்குள்ள வெப்பம் ஈர்ப்பு விசைகளை உருவாக்கி, பின்னர் தட்டுகளை கீழே இருந்து மேலே தள்ளுகிறது.
இந்திய மற்றும் யூரேசிய தட்டு இரண்டும் குறைந்த பாறை அடர்த்தியைக் கொண்டிருந்தன. இதனால் இமயமலை சிறிது சிறிதாக எழுந்தது. இமயமலை எழுச்சியில் டெதிஸ் கடல்நீர் வெளியேறியது. கடலில் இறந்துபோன கடல்வாழ் உயிரினங்ககளின் படிமங்கள் அங்காங்கே புதைந்துள்ளது.
இன்றும் கூட இமயமலை லேசான நகர்வில் ஆண்டுக்கு 1 செ.மீ அளவில் உயர்ந்து கொண்டுதான் உள்ளது. அதுபோல வடக்கு நோக்கியும் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படியே நகர்ந்தால் நாம் இருந்த இடத்திலேயே சீனாவையும் ரஷ்யாவையும் பிடிக்கலாம் என்று நினைக்கலாம்! ஆனால், அதற்கு பல மில்லியன் ஆண்டுகள் ஆகும், அதுவரை மனித இனம் தாக்கு பிடிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!