நர்சிங் மாணவி சீதாலட்சுமி மரணம் எழுப்பும் கேள்விகள்! அனஸ்தீஷியா உயிரை பறிக்குமா?

nursing student seethalakshmi
nursing student seethalakshmi
Updated on

திருச்சி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் செவிலியராக இரண்டாமாண்டு படித்து வரும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்ற இளம் மாணவி தனது மூக்கில் ஏற்பட்டுள்ள சிறு கட்டியை அகற்றுவதற்கு, தான் நர்சிங் படிப்பை மேற்கொண்டுவரும் அதே திருச்சி அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் மூக்கு கட்டியை அகற்றுவதற்கு தயாரான மருத்துவர்கள், அந்த பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் இதயதுடிப்பு சீரிழந்து சற்று நேரத்தில் நாடித்துடிப்பு குறைந்து மரணமடைந்துள்ளார்.இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மருத்துவமனை முன் சக செவிலியர்கள் போராட்டம் நடத்தியது அனைவர் கவனத்திலும் பதிந்தது.

அறுவை சிகிச்சையின் போது தரப்படும் மயக்க மருந்து மரணத்தை ஏற்படுத்துமா?

பொதுவாக அறுவை சிகிச்சை செய்யும் போது கொடுக்கப்படும் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) காரணமாக மரணம் ஏற்படுவது மிகவும் அரிதானது. ஆனால் சில நேரங்களில் கடுமையான பக்கவிளைவுகள் அல்லது உடல்நிலை சிக்கல்கள் காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மருந்துக்கு கடுமையான அலர்ஜி,சுவாசக் கோளாறு, இதய துடிப்பு திடீர் மாற்றம் அல்லது இதய நின்று போதல், ஆக்சிஜன் குறைபாடு, அதிக ரத்த அழுத்தம் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், ஏற்கனவே இருந்த இதய நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற உடல்நிலைகள் மோசமாதல் ஆகியவை அனஸ்தீஷியாவால் ஏற்படக்கூடிய ஆபத்துகளாக இருக்கிறது.

மேலும் சில அரிதான நிலைகளாக வீரியம் மிக்க ஹைபர்தெர்மியா என்ற அரிதான மரபணு தொடர்பான எதிர்வினை சில அனஸ்தீஷியா மருந்துகளுக்கு ஏற்படலாம் என்றும் தூக்கத்தில் சுவாசம் நிற்கும் நோய் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை எனவும் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ECG, ரத்தப் பரிசோதனை, உடல்நிலை மதிப்பீடு ஆகியவை செய்யப்படுவதுடன் அனஸ்தீஷியா தரும் மருத்துவர் தனியாகவும் பரிசோதிப்பார்.. அறுவை சிகிச்சை முழுவதும் இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு கண்காணிக்கப்படும்.

அனஸ்தீஷியாவால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைக்க பழைய நோய்கள், மருந்து அலர்ஜி, எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அனைத்தையும் மருத்துவரிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும் என்பதுடன் புகை, மது பழக்கம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.அறுவை சிகிச்சைக்கு முன் கூறப்படும் உணவுக்கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும்.

அறுவை சிகிச்சை சிறியதோ பெரியதோ தரப்படும் மயக்கமருந்து நோயாளியின் உடல் தன்மையைக் கருத்தில் கொண்டு கவனத்துடன் அளிக்கப்படுவதே மருத்துவரின் கடமையாகும். இனியும் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் ஆகியோர் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கணவர்களே இனி நிம்மதியா இருக்கலாம்! பெண்களின் ஷாப்பிங் பாரத்தை குறைக்க வந்த "CarryMen"!
nursing student seethalakshmi
logo
Kalki Online
kalkionline.com