

டெல்லியின் பரபரப்பான மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்பவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் பைகளை சுமந்து செல்லும் "CarryMen" என்ற புதிய மற்றும் வினோதமான சேவைகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள லஜ்பத் நகர், சரோஜினி நகர் அல்லது சாந்தினி சௌக் என எதுவாக இருந்தாலும், இங்குள்ள மார்க்கெட்டுகளில் மக்கள் மணிக்கணக்கில் நடந்து ஷாப்பிங் செய்வது வழக்கம். இது போன்ற புகழ்பெற்ற பிரம்மாண்டமான மற்றும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்வது எப்போதுமே ஒரே நேரத்தில் உற்சாகமாகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறது. அப்படி வாங்கும் கனமான பொருட்களைக் கைகளில் சுமந்து கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்குச் செல்வது பெரும் சிரமமாக இருக்கும்.
ஆனால் இப்போது, இந்த இன்னலைத் தீர்க்க, டெல்லியைச் சேர்ந்த "CarryMen" என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு ஷாப்பிங் உதவிச் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
உண்மையைச் சொல்லப்போனால், இது ஆயிரக்கணக்கான சோர்வடைந்த கணவர்கள், எரிச்சலடைந்த காதலர்கள், திக்குமுக்காடிய அம்மாக்கள் மற்றும் களைப்படைந்த ஷாப்பிங் செய்பவர்களைக் காப்பாற்றக்கூடும்.
அதாவது,"CarryMen" நிறுவனத்தின் மூலம் பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்ட உதவியாளர்கள் உங்களுடன் மார்க்கெட்டிற்கு வருவார்கள். நீங்கள் வாங்கும் அனைத்துப் பைகளையும் நீங்கள் சுமக்க வேண்டாம்... அவர்களே சுமந்து கொள்வார்கள், இதனால் நீங்கள் கைகளில் எந்த எடையும் இல்லாமல் ஜாலியாக ஷாப்பிங் செய்யலாம்.
அந்த உதவியாளர் பைகளை சுமப்பது மட்டுமில்லாமல், கடைகளில் வழி காட்டவும், வாடிக்கையாளருக்காக நீண்ட உணவு வரிசைகளில் நிற்பது, வாகன நிறுத்துமிடங்கள் அல்லது மெட்ரோ வாயில்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு உதவுவது, வெயில்/மழையிலிருந்து பாதுகாக்கக் குடை பிடிப்பது, மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் அவர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க இடங்களைக் கண்டறியவும் உதவுகிறார். சுருக்கமாகச் சொன்னால், வாடிக்கையாளர்கள் இறுதியாகக் கைகள் சுதந்திரமாகவும், மிகக் குறைந்த மன அழுத்தத்துடனும் சந்தையை அனுபவிக்கிறார்கள்.
பல வயதான வாடிக்கையாளர்கள் ஆடம்பரத்தை நாடவில்லை, மாறாக உட்கார்ந்து ஓய்வெடுக்க ஓர் இடம், அவர்களின் ஷாப்பிங் பைகளைச் சுமக்க ஒருவர், உணவு ஆர்டர் செய்ய உதவி, அல்லது வாடகைக் காருக்காகக் காத்திருக்கும்போது உதவி போன்ற சிறிய வசதிகளை மட்டுமே தேடுகிறார்கள் என்பதை கவனித்த இந்த நிறுவன குழு வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதற்காக, நீண்ட நேரம் சந்தையில் இருக்கும்போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்காக, எடுத்துச் செல்லக்கூடிய மடிக்கக்கூடிய நாற்காலிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் சோர்வாக உணர்ந்தால், உதவியாளர் சந்தையின் நடுவிலேயே ஒரு மடிக்கக்கூடிய நாற்காலியை போட்டு, அதில் அவர்கள் வசதியாக அமர்ந்து ஓய்வெடுக்கும் வசதியையும் ஏற்படுத்தி தருவார்.
இனிமேல் பெண்கள் ஷாப்பிங் போகும் போது கணவரோ, காதலனோ தேடவேண்டும் என்ற அவசியம் இல்லை. "CarryMen" மட்டுமே போதும் என்று மனநிலைக்கு பெண்கள் வந்து விட்டனர். ஏனெனில் "CarryMen" எவ்வளவு நேரமானாலும், எந்த வேலையானாலும் பொறுப்பாக, முகம் கோணாமல் செய்வார்கள் என்பதால் பெண்களிடையே "CarryMen" களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இதன் மூலம் உங்கள் நண்பர், காதலன் அல்லது கணவரை நீங்கள் சிரமப்படுத்தத் தேவையில்லை.
இந்த சேவை குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஷாப்பிங் வரும் பெற்றோர்கள் ஆகியோர்க்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது. இதுவரை வந்துள்ள பெரும்பாலான முன்பதிவுகள், வயதான வாடிக்கையாளர்கள் மற்றும் பெண்களிடமிருந்து வந்துள்ளதாக கூறியுள்ளது அந்த நிறுவனம்.
மேலும் பண்டிகைக் காலங்களில் அதிகளவில் திருமண ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்றே சொல்லலாம்.
தற்போது இந்த சேவை முதற்கட்டமாக டெல்லியில் உள்ள லஜ்பத் நகரில் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. விரைவில் படிப்படியாக சாந்தினி சௌக் போன்ற பிற பகுதிகளிலும் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த சேவைக்கு நேரத்தின் அடிப்படையில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால் இந்த சேவைக்கான ஆதரவு பெருகி வருகிறது.
அந்த வகையில் 30 நிமிட பேக்கேஜ் ரூ.79, 1 மணி நேரம் பேக்கேஜ் ரூ.149 என்ற அடிப்படையிலும் ஒரு நபர் சுமார் 12 கிலோ எடை உள்ள பைகளை சுமப்பர். அதற்கு மேல் எடை தேவைப்பட்டால், நீங்கள் மற்றொரு உதவியாளரை அமர்த்திக்கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் பொருட்களை நம்பி ஒப்படைக்கும் வகையில், இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் காவல்துறை சரிபார்ப்பு செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும், அவர்கள் அனைவரும் பிரத்யேக சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருப்பார்கள்.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. மேலும் தொடங்கிய முதல் மாதத்திலேயே 50-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை நிறைவு செய்துள்ளது. சுவாரஸ்யமாக, விலையுயர்ந்த இன்ஃப்ளூயன்சர் பிரச்சாரங்களை விட, வாய்மொழிப் பிரச்சாரம் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியதன் மூலமே இந்த நிறுவனம் பிரபலமடைந்துள்ளது.
இந்த சேவையை பெற carrymen services என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு மற்றும் கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற ஸ்டார்ட்அப்கள், பொருட்கள் வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறைக்க உதவலாம், ஆனால் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் அருகில் இருப்பதால் கிடைக்கும் மன ஆறுதலையும், சந்தோஷத்தையும் எந்தவொரு சேவையாலும் உண்மையாகவே ஈடுசெய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.