மக்களுக்கு அடுத்த ஷாக்..!! லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயரப்போகும் பெட்ரோல் டீசல் விலை..!

petrol diesel price
petrol diesel priceimage credit-thestatesman.com
Updated on

பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்த வேண்டியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசலை சில்லறை விற்பனை முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றன. மேற்காசிய நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் (OMCs)பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு கலால் வரியை குறைத்தும், இழப்பு ஈடாகவில்லை.

இதனால் இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல்-டீசல் விலையை கடந்த 25-ம்தேதியில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

அன்றைய தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.06 காசுகளும், டீசல் ரூ.3.08 காசுகள் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மே 15-ம்தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்பொழுது லிட்டருக்கு ரூ.7.5 முதல் ரூ.8 வரை ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.87-க்கும், டீசல் ரூ.99.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு அடுத்த ஷாக்..! பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எதெல்லாம் ஏறப்போகுது தெரியுமா..?
petrol diesel price

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், அதற்கேற்ப சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,600 முதல் ரூ.1,700 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மத்திய அரசின் தகவலின்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், கச்சா எண்ணெயை அதிக விலைக்குக் கொள்முதல் செய்துவிட்டு, பெட்ரோல் மற்றும் டீசலை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், கோடிக்கணக்கில் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

எனவே நிறுவனங்கள் தங்கள் உற்பத்திச் செலவைச் சமன் (Break-even) செய்ய, மொத்தமாக லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை உயர்த்தப்படலாம் என தர மதிப்பீட்டு நிறுவனங்களான ICRA மற்றும் CRISIL கணிக்கின்றன.

இந்த கூடுதல் விலை உயர்வு நடைமுறைக்கு வந்தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடும் பொருளாதாரச் சுமை ஏற்படும். கடந்த மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து உயர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 5.5-ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 4.5-ம் சந்தைப்படுத்தல் இழப்பை (marketing loss) சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்கு ஆசியாவில் விரிவடைந்து வரும் மோதல்களின் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விற்பனையில் 'இலாப-நட்ட சமநிலை'யை (break-even) எட்ட, வாகன எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்த வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தற்போது பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் இலாப வரம்பு (marketing margins) லிட்டருக்கு -ரூ. 5.5 ஆகவும், டீசல் விற்பனையில் -ரூ. 4.5 ஆகவும் உள்ளது. இது தவிர, சமையல் எரிவாயு (LPG) விற்பனையிலும் இந்நிறுவனங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. முந்தைய விலை உயர்வுகள் உட்பட, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு ரூ. 12 வரை உயர்த்தினால் மட்டுமே, வாகன எரிபொருள் விற்பனையில் இலாப-நட்ட சமநிலையை எட்ட முடியும்," என்று ICRA நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் இணை-குழுத் தலைவருமான பிரசாந்த் வசிஷ்ட் தெரிவித்தார்.

சர்வதேச விலைகள் உயர்ந்து வரும் சூழலில், உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனையில் ஒரு சிலிண்டருக்கு ரூ.650 வரை 'இழப்பு ஈடு செய்யப்படா நிலை'யை (under-recovery) எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருவதாக, பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா ஜூன் 1-ம்தேதி தெரிவித்தார். இதேபோல், விமான எரிபொருள் (ATF) விற்பனையில் ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படா நிலை லிட்டருக்கு ரூ.30 ஆக உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தடங்கல்கள் தொடர்ந்தால் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே நீடித்தால், சில்லறை விற்பனை விலையில் மேலும் உயர்வுகள் தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதால், அரசாங்கத்தின் சார்பில் ஏதேனும் ஒரு வடிவத்திலான இழப்பீடு அல்லது ஆதரவு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈரான் போர் மூண்டுள்ள கடந்த மூன்று மாதங்களில் பெரும்பாலான நாட்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேலாகவே நீடித்ததால், மே மாதத்தில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 7.5 ரூபாய் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு!
petrol diesel price

எனவே இந்த இழப்பை ஈடுகட்ட, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com