
ரெயில் சேவையை மிகவும் சுலபமாக்கும் பொருட்டு இரயில்வே அமைச்சகம் சமீப காலமாக பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ரெயில் சேவையை எளிதில் பெரும் வகையில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது, ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்’ என்ற செயலி உள்ளது.
புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்.’ செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன. இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ரெயில்வே அமைச்சகம் உருவாக்கிய ‘ரெயில்ஒன்’ என்ற செல்போன் செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்துள்ளார்.
எனவே, ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.
‘ரெயில்ஒன்’ செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம், முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரெயில் உதவி சேவைகள், ரெயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
இதன் பயன்பாடு எளிதாக இருப்பதுடன், பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதுதான் செயலியின் அடிப்படை நோக்கமாகும். இந்த செயலியில் டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை போட்டு வைக்கும் ‘ரெயில்வே இ-வாலெட்’ வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, ஏற்கனவே உள்ள ‘ரெயில்கனெக்ட்’ மற்றும் ‘யு.டி.எஸ்.’ செயலிகளின் பயனர் ஐ.டி. விவரங்களை பயன்படுத்தி, உள்ளே நுழைய முடியும். இதனால், எண்ணற்ற பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதில் எண்களை கொண்ட ‘எம்பின்’ மற்றும் பயோமெட்ரிக் லாகின் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ரெயில்ஒன்’ செயலி அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு சேவைக்கும் இடையே ஒருங்கிணைந்த தொடர்பை கொண்டிருப்பதால் பயணிகளுக்கு இதை கையாள்வது மிகவும் வசதியாக இருக்கும்.