
சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என மூன்று பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதற்கெல்லாம் தற்போது மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தி பயணிக்கும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என மூன்றிலும் பயணிக்க முடியும். மேலும் இந்த கார்டை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் 'ஒன் கார்டு' என்ற புதிய பிரத்தியேக டிக்கெட் சேவையை சென்னை முழுக்க நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த ஒன் கார்டு டிக்கெட் சேவை இன்டெக்கிரெடட் டிக்கெட்டிங் சிஸ்டம் கான்செப்ட் (integrated ticketing system concept) மூலம் செயல்படப்போகிறது. பொதுமக்கள் இனி அணைத்து விதமான பயண சேவைக்கும் ஒரே ஒரு டிக்கெட்டை காண்பித்து எளிமையாக பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது உங்களுக்கு ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போன்ற வடிவில் ஒரு டிக்கெட் கார்டு வழங்கப்படும். இந்த ஒரு அட்டையை வைத்து, நீங்கள் மூன்று விதமான பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி பயணித்துக்கொள்ளலாம். உங்கள் ஒன் கார்டு அல்லது டிக்கெட் கார்டில் இருப்பு தொகை இருக்கும் படி, உங்கள் தேவைக்கேற்ப தொகையை நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு எந்த போக்குவரத்துக்கு சேவை தேவைப்படுகிறதோ அதில் நீங்கள் இனி நேரடியாக பயணிக்கலாம். ஒவ்வொரு பயணமுறைக்கும் இனி நீங்கள் தனித்தனி டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட நேரம் நின்று டிக்கெட் எடுத்த பின்பு பயணிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சேவையை பயன்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய மொபைல் ஆப்ஸை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயணிகள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.