meta property="og:ttl" content="2419200" />
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் இனி தினமும் ராமர் கோவில் முழுவதுமாக ஒரு மணி நேரம் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு திரை உலகினரும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் நிறைய பேர் கலந்துக் கொண்டனர். அன்றிலிருந்து இந்தியா முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க வருகைத் தருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலிருந்தும் நிறைய மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருப்பதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கோவில் வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கானோர் ராமரை தரிசிக்க வருகைத் தருகின்றனர். பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் தரிசன நேரம் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இருந்தது. இதனால் கோவில் நிர்வாகத்திற்கு ராமரை அலங்கரிப்பதற்கும் அவர் இருக்கும் இடத்தைப் பராமரிப்பதற்கும் போதிய நேரம் கிடைப்பதே இல்லை.
இதனால் இப்போது கோவில் நிர்வாகம் ஒரு புது அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது கோவில் நேரம் திறப்பதிலும் மூடுவதிலும் எந்த மாற்றமும் இல்லை. காலை 6 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்குத்தான் மூடப்படும். ஆனால் அதற்கிடையில் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மட்டும் கோவில் அடைக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் கூறுகையில், “அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமருக்கு வயது வெறும் 5 தான். எனவே அவர் ஓய்வெடுக்க சிறிது நேரம் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுத்தான் கோவில் நிர்வாகம் நண்பகலில் ஒரு மணி நேரம் மட்டும் கோவிலை அடைக்க உத்தரவிட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.