லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் வசித்த இரண்டு இந்தியர்கள் படுகாயமடைந்தனர். அதேபோல் ஒரு இந்தியர் மரணமடைந்துள்ளார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த நபர் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இஸ்ரேல் காசா இடையேயானப் போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இன்னும் முடிவடையாமல் பரபரப்பாகவே இருக்கிறது. அதேபோல் மத்திய கிழக்குப் பகுதியில் சில காலமாகவே பரபரப்பு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போரை முடிக்கச் சொல்லி பலர் வலியுறுத்தியும்கூட முடிவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்த நிலையில் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகிவுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று காலை 11 மணியளவில் லெபனானிலிருந்து வந்த ஒரு ஏவுகணை இஸ்ரேலின் வடக்குப் பகுதியான மார்கலியோட் பகுதியைத் தாக்கியது. அந்தத் தாக்குதலில்தான் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் காயம்பட்ட இரண்டு இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்களாம். இறந்தவர் பெயர் பட்னிபின் மேக்ஸ்வெல் ஆகும். அதேபோல் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுத்தொடர்பாக அந்நாட்டின் அதிகாரி கூறியபோது, “இந்தத் தாக்குதலில் இந்தியர்கள் இருவருக்கும் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது“ இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலில் மேலும் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் போருக்கு லெபனானில் உள்ள ஷியா ஹிஸ்புல்லா கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. ஆகையால்தான் ஹிஸ்புல்லா தொடர்ந்து இஸ்ரேல் படைகள் மீது பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. மேலும் மத்தியத் தரைக்கடல் பகுதியையும் குறிவைத்துத் தாக்கி வருகிறது. ஹிஸ்புல்லா இஸ்ரேல் கொடிப் பறக்கும் கப்பலை மட்டும் தாக்குகிறேன் என்று கூறினாலும் அனைத்து கப்பல்களையுமே தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.