
ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விபத்தில் சிக்கியது. அந்த விமானம் அருகில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் பயணிகள், விமானிகள், பணியாளர்கள் உள்பட 241 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான விஜய் ரூபானியும் ஒருவர். நெஞ்சை பிளக்கும் வையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோர விபத்தில் ஒரு பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவரது பெயர் விஷ்வாஸ் குமார் ரமேஷ். தனது அண்ணனுடன் லண்டன் செல்வதற்காக அந்த விமானத்தில் பயணித்தார்.
விமானத்தில் 11 ஏ என்ற இருக்கையில் இருந்த அவர், விமானம் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு பயங்கர அதிர்வு ஏற்பட்டதும், அருகில் இருந்த அவசர வழி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் அம்புலன்சுக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் நடந்து சென்றார். இந்த வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் ஷ்ரிக் கூறினார்.
ஆமதாபாத்தில் 242 பேருடன் சென்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். எனவே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக நிறுவன தலைவர் சந்திரசேகரன் தனது எக்ஸ் தளத்தில், ‘ஏர் இந்தியா விமானத்தின் துயர நிகழ்வால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன’ என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், ‘விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களின் மருத்துவச்செலவை டாடா குழுமம் ஏற்கும். மேலும் விபத்தால் சேதமடைந்த மருத்துவக்கல்லூரி விடுதியை கட்டியெழுப்ப உதவப்படும்’ என்றும் கூறியுள்ளார்.