
தமிழகத்தில் மொத்தம் 78 டோல்வே என்று அழைக்கப்படும் சுங்கச்சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் சுங்கச் சாவடிகளில் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க மத்திய அரசால் இந்த ஏற்பாட்டை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகள் சிரமத்தை மேலும் குறைக்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் சலுகை பெரும் வகையில் வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஜூன் மாதம் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். மேலும் இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இந்த ஓராண்டு பாஸ் திட்டம் சுதந்திர தினமான நாளை (ஆகஸ்ட் 15-ம்தேதி) முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த ஆண்டு பாஸ் திட்டத்தின் மூலம் ஓராண்டு பாஸ் பெற விரும்பும் பயனர்களின் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் முதலில் சரிபார்க்கப்படும். பின்னர் அவர்கள் 3,000 ரூபாய் கட்டணத்தை ‘ராஜ்மார்க்யாத்ரா’ செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்திய, 2 மணி நேரத்திற்குள் ‘பாஸ்’ செயல்பாட்டுக்கு வந்து விடும். இந்த ஓராண்டு பாஸ் திட்டம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல் மாநில நெடுஞ்சாலை, மாநில-உள்ளாட்சி நிர்வாக கட்டண மையங்கள், ‘பார்க்கிங்’ போன்ற இடங்களில் தற்போதுள்ள வழக்கமான நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு அதற்கான கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கபபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘பாஸ்’ ஓராண்டு அல்லது 200 பயணங்கள் என்று எது முதலில் வந்தாலும் அதுவரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அதன்பிறகு இந்த பாஸ் தானாகவே வழக்கமான ‘பாஸ்டேக்’ ஆக மாறி விடும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தினை நீட்டிக்க விரும்பும் பயனர்கள் மீண்டும் 3000 ரூபாயை செலுத்தி பெற்றுக்கொள்ளவும் முடியும். இந்த ஓராண்டு ‘பாஸ்’ முறை, தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதேசமயம் வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் எந்த வாகன எண்ணுக்கு இந்த பாஸ் பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே இந்த பாஸை பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு வாகனத்திற்கு பயன்படுத்தினால் அது உடனடியாக செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு ‘பாஸ்’ ஒட்டிய வாகனங்கள், ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, அவர்களது செல்போன் எண்ணுக்கு எத்தனை முறை பயணம் செய்துள்ளோம் என்பது தொடர்பான குறுஞ்செய்தி வந்து விடும். இதனால் நீங்கள் எத்தனை முறை பயணம் செய்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த, ஆண்டு பாஸை கட்டாயம் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்கம்போல் உங்களிடம் உள்ள பாஸ்டேக் கட்டணத்தை செலுத்தியும் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லாம் என்றாலும் தற்போது பாஸ்டேக்கில் உள்ள தொகையை, ரூ.3,000 பாஸ் பெறுவதற்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.