

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று கிடைக்காததால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு உறுப்பினர் மட்டும் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தார். இதன் காரணமாக ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை.
விரைந்து தணிக்கை சான்று வழங்க வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழை வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி 9-ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். ஆனால் அன்றைய தினமே இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
பிறகு தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றமே மேற்கொள்ளும் என உச்சநீதிமனறம் தீர்ப்பளிக்கவே, நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஜனநாயகன் திரைப்படத்தில் பாதுகாப்பு படைத்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருப்பதால், அத்துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தணிக்கை குழுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இதில் இடம்பெற்று இருப்பதால், படத்திற்கான தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமா்வு ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை நேற்று ரத்து செய்தனர். இதுதவிர தணிக்கை வாரியம் இதுகுறித்து பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து, மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என தனி நீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தணிக்கை வாரியம் கூறியது போல் மீண்டும் மறுதணிக்கைக்கு அனுப்பவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போதைய சூழலில் ரிவைசிங் கமிட்டியின் (RC) படி சென்றால் மட்டுமே ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளிவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே ஜனநாயகன் படத்தை திரையிட படக்குழு அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது.
ரிவைசிங் கமிட்டிக்கு படம் சென்றால் குறிப்பிட்ட இடங்களில் படத்தின் காட்சிகளுக்கு கட் கொடுக்கப்படும். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பராசக்தி திரைப்படத்திற்கும் கிட்டத்தட்ட 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டு, அதன் பிறகே படம் வெளியானது.
அதேபோல் தற்போது ரிவைசிங் கமிட்டி கட் கொடுக்கும் காட்சிகளை நீக்கிவிட்டு, ஜனநாயகன் படத்தை திரையிட முயன்றால் மட்டுமே இப்படம் விரைவில் திரைக்கு வரும் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் தணிக்கை வாரியம் பரிந்துரைகளையும் படக்குழு ஏற்க வேண்டியது அவசியம்.
படக்குழு வழக்கு தொடராமல் ரிவைசிங் கமிட்டிக்கு சென்று இருந்தால் படம் எப்போதோ ரிலீஸ் ஆகியிருக்கும் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்