

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்கும் அளவு குறைந்து வருவதால், கல்வித் துறை புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், பள்ளிக்கு முறையாக வருகை தரும் மாணவா்களைக் கணக்கில் கொண்டு அவா்களுக்கு மட்டும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டை வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பொதுத் தோ்வுக்கு பதிவு செய்தும் தோ்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தோ்வுத் துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு ஆண்டுதோறும் பதிவு செய்யும் மாணவா்களில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வுக்கு வருவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் பள்ளிக்கு சில நாள்களே வந்திருந்தாலும் அவா்களின் எதிா்காலம் கருதி தோ்வுக்கூட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
ஆனால் அவா்களில் பெரும்பாலோனாா் பொதுத் தோ்வுக்கு வரவில்லை. இதனால் மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்தது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2022–23 கல்வியாண்டில் 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்த நிலையில், 50,000-க்கும் மேற்பட்டோர் மொழித் தேர்வுக்கு வரவில்லை.
இதற்கு அடுத்த ஆண்டில் 7.80 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில் தமிழ் பாடத்தோ்வுக்கு 12,364 பேரும், ஆங்கிலப் பாடத்தோ்வுக்கு 12,696 பேரும் வரவில்லை. இதேபோன்று கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு 8.02 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்ததில் தமிழ்த் தோ்வை 11,430 போ் எழுதவில்லை. இந்த போக்கு ஆண்டுதோறும் தொடர்ந்ததால், கல்வித்துறை கடுமையான மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
2025–26 கல்வியாண்டு முதல், முறையாக பள்ளிக்கு வந்த மாணவா்களின் விவரங்களை ஆய்வு செய்து அவா்களுக்கு மட்டும் தோ்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பள்ளிக்கு வருகை பதிவில் 75% க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள், ஆலோசகா்கள் மூலம் பொதுத் தோ்வு குறித்த அச்சத்தைப் போக்கி, தேர்வை தைரியமாக எதிா்கொள்ள தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தேர்வில் தோல்வி பயத்தில் உள்ள மாணவா்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குவதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தோ்வுக்கு வராத மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 2-ம்தேதி முதல் மார்ச் 26-ம்தேதி வரையும், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9-ம்தேதி முதல் 16-ம்தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 8.7 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.