முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் என்ற பேச்சு எழுந்துவரும் நிலையில், அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இன்று சந்தித்து உரையாடி இருக்கிறார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரும், அதிமுகவின் நீண்டகால பொருளாளர், தொடர்ந்து அமைச்சர், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்க முடியாத நேரங்களில் முதலமைச்சர் பொறுப்பு என்று ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவே விளங்கிய ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தன்னுடைய அரசியல் நகர்வை வெளிப்படுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். பிறகு எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றி துணை முதல்வராக செயல்பட்டு வந்தார். அதேநேரம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் எடுத்த ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய, பிறகு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
நீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்புகளே வந்ததால், தற்போது தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். இதற்காக கடந்த மாதம் புதிதாக ஒரு நாளிதழையும் தொடங்கி இருக்கிறார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் மிகப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைக் கூட்டி, தன்னுடைய பலத்தைக் காட்டினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உச்சபட்ச நட்சத்திரமாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், ஓபிஎஸ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு தனக்கு நெருக்கமானவர்களை, நண்பர்களை, முக்கியப் பிரபலங்களைச் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் பயணத்தை நடிகர் ரஜினிகாந்த்தில் இருந்து தற்போது தொடங்கி இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.