இணைய உலகில் கூகிளின் ஆதிக்கத்தை உடைக்க பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இணைய உலாவிகளில் (பிரவுசர்) கூகிள் குரோம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. 2008 இல் குரோம் தொடங்கப்பட்டபோது, மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை அது வீழ்த்தும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது.ஆனால் , குரோம் அதை தெளிவாக செய்தது.வெகு காலமாக இதன் முதலிடத்தைப் பிடிக்க எந்த நிறுவனமும் முயற்சிக்க வில்லை. யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உலகளவில் சுமார் 300 கோடி பயனர்களை குரோம் பெற்றுள்ளது. கூகுள் இணையத்தில் தனது மதிப்பை தக்க வைக்கும் வகையில் AI தொழில்நுட்பமான ஜெமினியை ஏற்கனவே இணைக்கத் தொடங்கியுள்ளது.
கூகிள் குரோமின் நீண்டகால இண்டர்நெட் உலக ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் OpenAI நிறுவனம் AI தொழில்நுட்ப பிரவுசரை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், அதன் புதிய உலாவியை பயனர்கள் இணையத்தில் எவ்வாறு தேடுகிறார்கள், உலாவுகிறார்கள் மற்றும் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
அட்லஸ் பிரவுசர் செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான உலாவல்களைவிட விரைவான, புத்திசாலியான மற்றும் செயல்திறன் மிக்கதாக இருக்கும்.இது இணையத்தில் உங்கள் பணிகளை எளிதாக்க உதவுகிறது.இதன் ஒவ்வொரு தாவலிலும் ChatGPT மொழிப் உரையாடல்களை போல உள்ளடக்கம், ஆய்வு அல்லது பணிகளை மேம்படுத்துகிறது.
உலாவலில் பார்த்த பக்கங்கள் மற்றும் செயல்களை நினைவில் வைத்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. இந்த வசதி மற்ற உலாவிகளில் இருந்தாலும் இதில் அதிக நினைவாற்றல் வசதி உள்ளது. தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப்பிற்காக மட்டுமே வெளியிடப்பட்ட அட்லஸ் உலாவி , விரைவில் விண்டோஸ் சாதனங்கள் , ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் விரிவடையும் என்று ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.
ஓபன் ஏஐ இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலாவியை பற்றி "ஒரு உலாவி எதைப் பற்றியது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது? என்பதை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் கிடைக்கும்".என்று கூறியிருந்தார். அட்லஸின் உலாவியின் மையத்தில் ஏஜென்ட் பயன்முறை எனப்படும் ஒரு தனித்துவமான பிரீமியம் வசதி உள்ளது.இந்த பயன்பாடு உலாவி பயனரின் சார்பாக செயல்பட அனுமதிக்கிறது. பிரவுசரில் உலாவுதல், தரவைச் சேகரித்தல் மற்றும் பயனரின் உலாவல் வரலாறு மற்றும் கூறப்பட்ட இலக்குகளின் அடிப்படையில் அதன் காரணத்தை விளக்கி ,இது உங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துகிறது என்று ஆல்ட்மேன் கூறினார்.
குரோமை பிரவுசரை வாங்க முன்பு OpenAI-ன் நிறுவனம் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அட்லஸ் பிரவுசரை வெளியிட்டுள்ளது. இந்த முறை உரையாடல் AI, அறிவார்ந்த ஆட்டோமேஷன் மற்றும் தேடலுக்கும் செயலுக்கும் இடையிலான தடையற்ற ஒருங்கிணைப்பு மூலம் உலாவி அனுபவத்தை மறுவரையறை செய்கிறது. இதன் மூலம் கூகிள் குரோமிற்கு கடும் சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.