

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தந்த வரங்களில் ஒன்றாகச் சாட்ஜிபிடி (ChatGPT) இருக்கிறது என்றால் அது மிகையாகாது. வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் முதல் உணர்வுபூர்வமான உரையாடல்கள் வரை அனைத்திற்கும் சாட்ஜிபிடி வழிவகுக்கிறது. தற்போது ஆரோக்கியம் சம்பந்தமான தரவுகளைப் பெறுவதன் மூலம், இந்தச் செயலி மேலும் நன்மைகளை வழங்கப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்ன புதுமை இதில்?
ChatGPT-யின் புதிய பகுதியான ChatGPT Health தான் அந்த நன்மை தரும் செயலி. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட இது உடல் நலம் குறித்த நல்ல அனுபவம் (“Health” tab experience) ஆகும். உடல்நலம் சார்ந்த தகவல்கள், மருத்துவ பதிவுகள் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய செயலிகளின் தரவுகளை சேர்த்து பயனர்களுக்கு உதவுகிறது.
சிறந்த ஆரோக்கியத்திற்கான தகவல்கள் இன்று இணையதளங்கள், செயலிகள், உடலில் அணியக்கூடிய மின்னணு சாதனங்கள் (Wearables), PDF கோப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள் எனப் பல வடிவங்களில் சிதறிக் கிடக்கின்றன. உலகளவில் வாரந்தோறும் 230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ChatGPT-யிடம் ஆரோக்கியம் தொடர்பான கேள்விகளைக் கேட்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டே 'ChatGPT Health' உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் பகிரும் ஆரோக்கியத் தகவல்கள் மற்றும் சூழல் மூலம் பதில்கள் வழங்கப்படுகின்றன. ChatGPT உடன் இப்போது மின்னணு மருத்துவ பதிவுகள் மற்றும் Apple Health, Function, MyFitnessPal போன்ற உடல் நலனுக்கான செயலிகளை பாதுகாப்பாக இணைக்கலாம் என்கிறது தகவல்கள். இதனால் சமீபத்திய ஆய்வக பரிசோதனை முடிவுகளைப் புரிந்துகொள்ளவும், மருத்துவருடனான சந்திப்புகளுக்கு தயாராகவும், தகுந்த உணவு மற்றும் உடற்பயிற்சி முறையை எவ்வாறு அணுகுவது என்பதற்கான ஆலோசனையைப் பெறவும் உதவுகிறது.
மேலும், நமது சுகாதாரத் தேவைகளின் அடிப்படையில் பல்வேறு மருத்துவக் காப்பீடுகளைப் (Insurance) புரிந்துகொள்ளவும் ChatGPT உதவுகிறது. உடல்நலம் தொடர்பான உரையாடல்கள் மற்றும் இணைக்கப்பட்ட தரவுகள் மிகவும் பாதுகாப்பான முறையில் தனிப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும் என்ற உறுதியையும் 'ChatGPT Health' வழங்குகிறது.
இது நமது உடல்நலம் குறித்த சுருக்கமான விளக்கங்கள், ஆரோக்கிய ஆலோசனைகள், சோதனை முடிவுகளை புரிந்துகொள்ளும் விதமாக விளக்குதல், மருத்துவ சந்திப்பிற்கான முன்னேற்பாடு போன்ற உதவிகளை மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ChatGPT Health ஒரு மருத்துவர் இல்லாத சாதனம் என்பதையும் இது மருத்துவர்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனையை மாற்றுவதற்காக அல்ல என்பதையும் நினைவில் வைப்பது நல்லது.
இது தரும் விளக்கங்களை மட்டும் நமது கேள்விகளுடன் தொடர்புடையதாக இருந்தால் ஏற்கலாம். ஆனால் சிகிச்சையை அல்ல. முழுமையான சிகிச்சை என்பது நேரடி மருத்துவ ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும் என்பதில் கவனம் கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
அறிவியல் தொழில் நுட்பங்கள் எவ்வளவு முன்னேறினாலும் அதில் நன்மைகளுடன் சில மறைமுகமான பாதிப்புகளும் இருக்கலாம். அவற்றை பாதுகாப்புடன் கையாளவேண்டும் என்கின்றனர் AI நிபுணர்கள்.