
காஷ்மீர் பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் கடந்த மாதம் 26ந் தேதி சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில், இந்தியா 7ந் தேதி நள்ளிரவு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலோடு, இந்தியா நிறுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இரவும் 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்றும், பாகிஸ்தான் மீது டிரோன் தாக்குதலை நடத்தி இந்தியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாலையிலேயே, பாகிஸ்தானின் வான் தடுப்பு சாதனக் கண்களின் மீது மண்ணை தூவிவிட்டு இந்திய டிரோன்கள், வெற்றிகரமாக இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இந்தியா நடத்தி வரும் இதுபோன்ற தாக்குதலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டு மக்களை சமாதானப்படுத்தும் வேலையையே பாக். செய்து வருகிறது. ‘7ந் தேதி இந்தியா நடத்திய தாக்குதலின்போது, இந்தியாவின் 5 விமானங்களை சுட்டு அழித்து விட்டோம்’ என்று அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது. இந்தியா, தனது வான் எல்லையில் இருந்து இந்த தாக்குதலை நடத்தியது என்று தெளிவாகக் கூறியது.
ஆனால் பாகிஸ்தான் மக்களோ, 'சமூக பக்கங்களில் நீங்கள் சுட்டு வீழ்த்திய விமானங்கள் எங்கே? அதன் படங்கள் எங்கே?' என்று கேட்கின்றனர். நேற்றைய இந்தியாவின் டிரோன் தாக்குதல்களிலும், '25 டிரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டோம்' என்ற தகவலை பாக். ராணுவம் கிளப்பி விட்டது. ஆனால், ‘நீங்கள் சுட்டு வீழ்த்திய படத்தை வெளியிடுங்கள். அப்போதுதான் நாங்கள் நம்புவோம்' என்று அந்த நாட்டு மக்களே கூறத் தொடங்கி உள்ளனர்.
அதனால், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமலும், தம் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தவித்து வருகிறது.