
ஆபரேஷன் மஹாதேவ்: கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி , ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பாஹல்காமில், சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்து , 26 பேரை அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது உள்ளது. உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு , தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை துரிதப் படுத்தியது.
பாஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவம் மே 7 அன்று பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் முற்றிலும் நிலைகுலைந்து போனது . பாகிஸ்தானில் உள்ள ஏராளமான தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை தகர்த்தது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மற்றும் லஷ்கர் ஈ தொய்பா முகாம்கள் பலவும் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்தது. இந்த தாக்குதலில் இந்திய பெண் விமானிகள் முக்கிய பங்கை கொண்டிருந்தனர். தாக்குதலில் பாகிஸ்தான் விமான தளங்களை இழந்தது. பாகிஸ்தானின் போர் நிறுத்தக் கோரிக்கையை ஏற்ற இந்தியா, தாக்குதலை நிறுத்தியது. ஆனாலும் , ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தியது.
மேலும் 15 மே அன்று புல்வாமாவின் டிராலில் மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜூன் 2 அன்று பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை ஶ்ரீ நகரில் பாதுகாப்பு படை கைது செய்தது. ஜூன் 29 ஆம் தேதி ரஜோரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜூன் 26 அன்று உதம்பூரின் வசந்த்கரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி மௌல்வி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கை களை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையை தொடங்கியது. காஷ்மீரில் உள்ள ஜபர்வான் மலைத்தொடரில் உள்ள ஒரு சிகரம் தான் மகாதேவ் பகுதி. மிகவும் புனிதப் பகுதியாக கருதப்படும் இந்த சிகரம் ஆன்மீக ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் நாட்டுக்கு முக்கியமானது. இங்கிருந்து லிட்வாஸ் மற்றும் முல்னார் பகுதிகளை கண்காணிக்க முடியும். பயங்கரவாதிகள் இந்த பகுதிகளில் பதுங்கி இருந்தால் , அவர்களை கண்டுபிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பெயரிடப்பட்டது.
பதுங்கிய இருந்த பயங்கரவாதிகள் சீன அல்ட்ரா ரேடியோவை பயன்படுத்தி வந்தனர். இதை இடைமறித்த இந்திய ராணுவம் , உளவு டிரோன்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் தீவிரவாதிகளின் இருப்பிடத்தை கண்டறிந்தது. இவர்கள் இருந்த டாக்சிகாம் காட்டுப் பகுதியை இந்திய ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் முக்கிய தீவிரவாதிகள் மூன்று பேர் பலியாகினர்.இவர்கள் சுலேமான் என்ற ஆசிப், ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பஹல்காம் தாக்குதலில் மட்டுமல்லாமல் , ஏற்கனவே பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.