தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடா? ஆளுநர் உரையை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

"வழங்கப்பட்ட உரையை ஒரு வரிகூட மாற்றாமல் வாசித்துள்ளார்" என திமுக மற்றும் அதிமுக அதிரடி குற்றச்சாட்டு!
புதிய தொழில் கொள்கை
புதிய தொழில் கொள்கை
Updated on

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் அதன் தலைவர் சி. ஜோசப் விஜய் மே 10ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் . தொடர்ந்து 11ம் தேதி அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பதவியேற்ற நிலையில் மே 13ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று தவெக அரசு பெரும்பான்மை நிரூபித்தது . அப்போது அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் இந்த கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் பங்கு பெற்றனர் . இதில் கவர்னர் புதிய அரசின் திட்டங்கள் நோக்கங்கள் குறித்து நீண்ட உரை ஆற்றினார்.

கூட்டம் தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் எனும் பலரின் கோரிக்கை நிறைவேறியது . எனினும் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

இது குறித்துப் பெருமிதம் தெரிவித்த ஆளுநர், "மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை (ராஜ்பவன்) இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய உதயம் தோன்றிய நாள். கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறுமின்றி வாசிக்கப்பட்டது மனநிறைவைத் தருகிறது" எனக் குறிப்பிட்டார்.

மேலும் 'மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் என்று வாசிக்கப்பட்டதால் மன நிறைவு அடைந்ததாகவும் இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து பயணிக்கத் துவங்கி உள்ளோம் என்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது' எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

அவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் நிதிநிலை தொடர்பான அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில அம்சங்கள் கவர்னர் உரையில் முக்கிய இடங்கள் பெற்றிருந்தன . மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகவும், இரு மொழிக் கொள்கை தொடரும் என்றும் ஓராண்டு காலத்தில் வருவாய் பற்றாக்குறை கணிசமாக அதிகரித்தது பற்றியும் திமுக ஆட்சி காலத்தில் கடன் தொகை இரு மடங்காக அதிகரித்தது பற்றியும் , தமிழ்நாட்டுக்கு தேவையான மத்திய அரசு நிதியை பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும் எனவும் கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டது.

சட்டமன்ற கூட்டத் தொடர் துவங்கும் முன்னரே எதிர்க்கட்சியான திமுக-வினர் அதன் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் "வாயை திறங்க சிஎம்" என கருப்பு பேட்ச் அணிந்து வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

"த.வெ.க அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசித்துள்ளார்.த.வெ.க-வினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக ஆளுநர் உரை உள்ளது.திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை. எங்கள் அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர்; மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே ஆளுநர் உரை அமைந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த எந்த ஒரு உரையையும் ஆளுநர் முழுமையாகப் படித்ததே இல்லை; பல திருத்தங்களைச் செய்வார். ஆனால் இன்று, தவெக அரசு எழுதிக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார். இதைப் பார்க்கும்போது தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது " என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்,

"தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது.ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை.சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது; 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தவெக." என குற்றம் சாட்டினார்.

இவர்கள் இடையே தவெக அரசுக்கு ஆதரவு தரும் விதமாக ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

" சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.

2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.

ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது." என்று புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சட்டமன்ற கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமின்றி இருக்கும் நிலையில் தற்போது புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் எவ்வித சலசலப்பும் இன்றி ஆளுநர் உரையுடன் அமைதியாக நடந்து முடிந்திருப்பது கவனிக்கத்தக்கது .

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1,28,934 கடன் சுமை: வெள்ளை அறிக்கை காட்டும் அதிர்ச்சி தகவல்..!
புதிய தொழில் கொள்கை
logo
Kalki Online
kalkionline.com