
உடல் உறுப்பு தானம் என்பது, ஒருவர் தன் உடல் உறுப்புகளை உயிருடன் இருக்கும்போதோ அல்லது இறந்த பின்னரோ மற்றொருவருக்குத் தானம் செய்வதாகும். ஒருவர் உயிருடன் இருக்கும் போது சிறுநீரகம், கல்லீரலின் பகுதி போன்ற உறுப்புகளையும், இறந்த பிறகு இதயம், நுரையீரல், கண்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும். இந்த செயல், நோயுற்றவர்களுக்கு புதிய வாழ்வளித்து, அவர்களின் உயிரைக் காக்கும் ஒரு உன்னத செயலாகும்.
2023-ம் ஆண்டு மூளைச் சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனைதொடர்ந்து ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்தியாவில் முன்பேதும் இல்லாத வகையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இத்தகைய தானங்கள் அதிகரித்து வரக் காரணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக செயல்படும் மருத்துவ கட்டமைப்பும் தான் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.
2023-ம் ஆண்டு முதல் தற்போது வரை 522 பேர் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதில், கடந்தாண்டு 208 பேர் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார்கள். உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்த பின்னர் 23,180 பேர் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2,242 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ள நிலையில், இந்த உடல் உறுப்பு தானம் மூலம் இதுவரை 8,017-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகைகளில் பயன் அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை மட்டுமின்றி, உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தவும், அவர்களை அங்கீகரிக்கவும், அதனைவிட சிறப்பாக காலத்திற்கும் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும் வகையில் தமிழக அரசு அசத்தலான முன்னெடுப்பை எடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மருத்துவமனைகளின் நுழைவு வாயில்களில் அந்தந்த மருத்துவமனைகளில் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்களை கல்வெட்டுகளில் பதிந்து அவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில், மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்க Wall of Honor ஏற்படுத்தப்படும் என்றும் வரும் 30ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதனை தொடக்கிவைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் இந்த அசத்தலான முன்னெடுப்பின் மூலம் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதுடன், உறுப்பு தானம் கிடைக்காமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் இதனால் குறையத் தொடங்கும்.