

தஞ்சையை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் சாலை விபத்தி சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.இந்தத் துயரமான சூழலிலும், அவரது பெற்றோர் முன்வந்து இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்யச் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் பெறப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மறுவாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன.
குறிப்பாக, உயிரிழந்த இளைஞரின் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயது நோயாளிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அந்த நபருக்குத் தடையின்றி இதயம் சென்றடையத் தேவையான ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. ஒரு இளைஞரின் உயிரிழப்பு பலரது வாழ்வில் ஒளியேற்றியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தஞ்சையில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் இதயம் கொண்டுவரப்பட்டது. அமைந்தகரையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்கியதும், மருத்துவக்குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு விரைந்தனர். நெரிசலின்றி செல்ல காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு, அறுவை சிகிச்சை மூலம் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் தீவிர முயற்சியால் மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இதற்காகத் தஞ்சாவூர் முதல் சென்னை வரை போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் சிறப்பு 'பசுமை வழித்தடத்தை' (Green Corridor) உருவாக்கி, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல வழிவகை செய்தனர். காவல்துறையின் இந்த அசாத்திய வேகமும், துல்லியமான திட்டமிடலும் ஒரு உயிரைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது.
உரிய நேரத்தில் இதயத்தை கொண்டு வந்து சேர்த்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் இதற்காகப் பாடுபட்ட அனைத்து துறையினருக்கும் தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிகின்றன.