இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
இரண்டு காரணி அங்கீகாரம் (Two-Factor Authentication) கட்டாயம்
டிஜிட்டல் கட்டணப் பாதுகாப்பை உறுதி செய்ய, இனிமேல் இரண்டு-காரணி அங்கீகாரம் (Two-Factor Authentication) கட்டாயமாக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், மக்கள் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் ஆர்பிஐ நம்புகிறது.
புதிய முறைகள் என்னவாக இருக்கும்?
தற்போதுள்ள SMS OTP-க்கு கூடுதலாக, பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த (அடையாளம் காண) பல புதிய பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. அவை:
கடவுச்சொல் (Password)
பின் (PIN)
டெபிட் கார்டு (Debit Card)
மென்பொருள் டோக்கன் (Software Token)
கைரேகை (Fingerprint) அல்லது பயோமெட்ரிக்ஸ் (Biometrics) போன்ற விருப்பங்கள்.
இந்த இரண்டு-காரணி அங்கீகார முறையில் எஸ்எம்எஸ் OTP-யும் ஒரு விருப்பமாக தொடர்ந்து கிடைக்கும் என்றும் ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
சைபர் குற்றங்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை
இந்தியாவில் ஆன்லைனில் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், ஆன்லைன் மோசடிகளும் (சைபர் குற்றங்களும்) கூடிக்கொண்டே வருகின்றன. இப்போது, சின்ன கடைகள் முதல் காய்கறி விற்பவர்கள் வரை என எல்லாரும் டிஜிட்டல் முறையில் பணம் வாங்கவும் கொடுக்கவும் தொடங்கிவிட்டார்கள்.
இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்தாலும், மக்களை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பதில் பெரிய சிக்கல் உள்ளது. மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் ஏமாற்றப்பட்டு, கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை ஒரேயடியாக இழக்கின்றனர். இதனால் மக்கள் மனதளவில் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டே, ரிசர்வ் வங்கி இப்போது இந்த இரண்டு காரணி அங்கீகாரத்தை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளது.
விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
இந்த புதிய டிஜிட்டல் கட்டண விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள், அதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையில் ஏதேனும் பண இழப்பைச் சந்தித்தால், அந்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட முழு இழப்பையும் அந்த நிறுவனங்களே கட்டாயம் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.