.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தொலைதூரப் பயணங்களுக்கு பொதுமக்கள் பலரும் ரயில்வே போக்குவரத்தையே அதிகம் நம்பியுள்ளனர். பொதுவாக ரயில்வே டிக்கெட் முன்பதிவு, இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்களும், திடீர் பயணத்தை மேற்கொள்பவர்களும் கடைசி நேரத்தில் தட்கல் முறையில் டிக்கெட்டை பெற்று பயணத்தை மேற்கொள்வார்கள். இந்நிலையில் முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட்டை பெறுவதற்கு ஓடிபி எண் கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தட்கல் டிக்கெட் முறையில் முறைகேடுகள் நடப்பதாக ரயில்வேக்கு புகார்கள் குவிந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டை எடுக்க ஆதார் கார்டு கட்டாயம் என்ற புதிய விதிமுறையை ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்தது.
அதேபோல் தற்போது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட்டை எடுக்கும்போது, ஓடிபி கட்டாயம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், டிக்கெட் ஏஜென்டுகள் முறைகேடான வகையில் தட்கல் டிக்கெட்டுகள் பெறுவதைத் தடுக்க முடியும்.
ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டை எடுக்க முடியாதவர்கள், ரயில் நிலைய கவுண்டர்களில் வரிசையில் நின்று தட்கல் டிக்கெட்டை பெறுவது வழக்கம். காலை 11 மணிக்கு கவுண்டர்களில் வழங்கப்படும் தட்கல் டிக்கெட்டுக்கு அதிகாலை முதலே பயணிகள் வரிசையில் நிற்பர். ஆனால் சிலர் கமிஷன் பெறுவதற்காக அதிகாலையில் வரிசையில் நின்று தட்கல் டிக்கெட்டை பெற்று, பயணிகளிடம் விற்று விடுகின்றனர். ஒரு சிலர் இதனையே பகுதி நேர வேலையாகவும் பார்க்கின்றனர்.
இதனைத் தடுக்க இனி கவுண்டர்களில் வழங்கப்படும் தட்கல் டிக்கெட்டுக்கு ஓடிபி கட்டாயம் என்ற முறையை கொண்டு வந்துள்ளது ரயில்வே அமைச்சகம். இதன்படி முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட்டை எடுக்கும் போது, சம்பந்தப்பட்ட பயணியின் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி எண்ணை சரியாக சொன்னால் மட்டுமே தட்கல் டிக்கெட் வழங்கப்படும்.
தட்கல் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதுமே இதன் முக்கிய நோக்கம்.
தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஓடிபி முறை கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று சுமார் மேற்கு ரயில்வேயில் உள்ள 12 ரயில்களுக்கு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திட்டம் 52 ரயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஓடிபி முறை, இன்னும் சில தினங்களில் அனைத்து ரயில்களுக்கும் விரிவாக்கம் செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஓடிபி கட்டாயம் என்பதால், இனி அடுத்தவருக்காக கமிஷன் முறையில் ஏஜெண்டுகள் டிக்கெட்டுகளைப் பெற இயலாது. பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது ரயில்வே நிர்வாகம். அவ்வகையில் வருகின்ற 2026 ஜனவரி மாதம் முதல் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் போர்வை, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை கட்டண அடிப்படையில் வழங்கவுள்ளது.