

வாட்ஸ்அப் செயலி மூலமாக பிறப்பு, இறப்பு மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களை பெற தமிழக அரசு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இனி வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அரசு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து, கால தாமதமின்றி உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக பொதுமக்கள் 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
இந்த வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் அனைவரும் தங்கள் மொபைல் போனில் சேமித்து வைத்துக் கொள்வது சிறந்தது. தமிழக மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இந்த வாட்ஸ்அப் எண்ணில் அனைத்து தகவல்களும் தமிழ் மொழியிலேயே வழங்கப்படுகின்றன. தற்போது வாட்ஸ்அப்பில் அரசு சான்றிதழ்களை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த முழு வழிகாட்டுதலை பார்ப்போம்.
சானறிதழ் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை:
1. முதலில் 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு வணக்கம் என ஒரு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு எந்த சான்றிதழ் வேண்டுமோ அல்லது என்ன தகவல் வேண்டுமோ அது குறித்தும் நீங்கள் தட்டச்சு செய்யலாம்.
2. உடனே நம்ம அரசு - தமிழக அரசின் வாட்ஸ்அப் சேவைக்கு வரவேற்கிறோம் என்ற குறுந்தகவல் உங்களுக்கு வரும்.
3. பிறகு திரையில் தெரியும் அரசு துறைகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு எந்தத் துறை சார்ந்த சான்றிதழ் வேண்டுமோ அல்லது விவரம் வேண்டுமோ அந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தற்போது 17 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
4. பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழ் வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாநகராட்சியைத் தேர்வு செய்து தேவையான சான்றிதழை கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் அல்லது விண்ணப்ப எண்ணை உள்ளிட வேண்டும்.
6. மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை உள்ளிட்டால், நீங்கள் கேட்ட சான்றிதழ் வாட்ஸப்அப்பில் வந்து விடும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. நம்ம அரசு வாட்ஸ்அப் சேவையில் ஏதேனும் உதவி தேவையெனில் 1800 425 6000 என்ற இலவச எணணை அழைக்கலாம்.
சான்றிதழை பதிவிறக்கம் செய்த பின்னர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்த சேவை டைம் அவுட் ஆகிவிடும்.
நம்ம அரசு வாட்ஸ்அப் சேவையில் 17 துறைகளைச் சேர்ந்த 51 அரசு சேவைகள் வழங்கப்படுகின்றன. வாட்ஸ்அப்பின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்யும் வண்ணம் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயல்பான உரையாடலை சாத்தியமாக்க கிமி தொழில்நுட்பம் மற்றும் கட்டணம் செலுத்தும் முறை ஆகியவையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த சேவையில் பல்வேறு துறைகள் இணைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.