

நாட்டில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு 100 மில்லியன் ஆக இருந்து மூததக் குடிமக்களின் எண்ணிக்கை, வருகின்ற 2036-க்குள் 230 மில்லியனை கடக்கும் என மக்கள்தொகை கணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 319 மில்லியன் ஆக அதிகரிக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
கருவுறுதல் விகிதம் குறைவதும், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதுமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களை காட்டிலும், தென்மாநிலங்களில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகம். அடுத்த 20 வருடங்களில் ஏழில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கும் ஏற்பட்ட வயதை கடப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொலைநோக்குப் பார்வையுடன் மூத்த குடிமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில், மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் சிறப்பு திட்டங்களை அவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள்:
1. அடல் பென்ஷன் யோஜனா: 18 முதல் 40 வயது வரை உள்ள குடிமக்கள் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். 60 வயதிற்குப் பிறகு இத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பென்ஷன் வழங்கப்படும்.
2. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு: மூத்த குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து காவல் நிலையங்களிலும் நோடல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். அதோடு அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.
3. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலன் சட்டம் 2007: இந்த சட்டத்தின்படி மூத்த குடிமக்களின் பிள்ளைகள் மற்றும் வாரிசுகள், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குவதை கட்டாயமாக்குகிறது.
4. முதியோர் உதவி எண்: 14567. நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்கு இந்த கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கலாம்.
5. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
6. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா: 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டை வழங்கப்படுகிறது.
7. இ-சஞ்சீவனி டெலிமெடிசின்: இத்திட்டத்தின் கீழ் மூத்தக் குடிமக்கள் எங்கும் அலையாமல், வீட்டிலிருந்த படியே இலவசவாக மருத்துவ ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெறலாம்.
8. ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு சக்கர நாற்காலிகள், செவிப்புலன் கருவிகள் மற்றும் ஊன்றுகோல்கள் போன்ற உதவிச் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும்.
9. முதியோர் சுகாதாரப் பராமரிப்புக்கான தேசியத் திட்டம்: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மலிவான விலையில், உயர்தரமான சுகாதாரப் பராமரிப்பை அரசு உறுதி செய்கிறது.
10. அடல் வயோ அபியுதய் யோஜனா - ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டம்: இத்திட்டத்தின் படி ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு நடமாடும் மருத்துவ சேவைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற சேவைகளை வழங்கிட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
11. மறு வேலைவாய்ப்புக்கான மூத்த திறன் கொண்ட குடிமக்கள் (SACRED) போர்டல்: இந்த இணையதளத்தின் மூலம் மூத்த குடிமக்கள் பலரும், தங்கள் திறமைகளைக் கொண்டு மறு வேலை வாய்ப்பை பெற முடியும்.
12. ஸ்மார்ட் சாதனங்கள்: அதிநவீன ஸ்மார்ட் வாட்ச்கள் மூத்த குடிமக்களின் இதயத்துடிப்பைக் கண்காணித்து, அவசர காலங்களில் எச்சரிக்கைகளை அனுப்ப உதவுகின்றன. மேலும் ஆனலைன் மருந்தகங்களின் மூலம் வீட்டிலிருந்து கொண்டே மருந்துகளை ஆர்டர் செய்து பெற முடிகிறது.