
இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழ, மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடினர்.
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் பெருநகரப் பகுதியில் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் பலர் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர். அங்கு வானுயர்ந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள்.
அதே கட்டடத்தில் பணியில் இருந்த 90 பேர் மாயமானார்கள். அவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த கட்டிடத்தில் இருந்து இதுவரை 7 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணி நடப்பதாகவும் ராணுவ மந்திரி கூறினார். தாய்லாந்து தலைநகரில் சில மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
மியான்மரின் தலைநகர் நேபிடாவில், நிலநடுக்கம் மத வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தியது. சில பகுதிகள் தரையில் இடிந்து விழுந்தன, சில வீடுகள் இடிந்து விழுந்தன. நாட்டின் தென்மேற்கே உள்ள சாகைங் பகுதியில், 90 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது.
மியான்மரில் நிலநடுக்கத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 730 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இறப்பு எண்ணிக்கை மற்றும் காயங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'அவசரநிலை' அறிவித்து, 'எந்தவொரு நாடும் எந்த அமைப்பும்' உதவிக்கு முன்வருமாறு கேட்டுக்கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேவையான எந்த உதவியையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ‘அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன், எங்கள் அதிகாரிகளை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்று அவர் எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் உதவி வழங்கியுள்ளனர்.
வடகிழக்கில், சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணத்திலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது; அங்கு ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சீனா அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. அதேபோல் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
வியட்நாம் மற்றும் மேற்கு வங்காளம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேற்குவங்காளத்தில் கொல்கத்தா மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரில் இம்பால் மற்றும் உக்ருல் மாவட்டங்கள் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேகாலயாவில் கிழக்கு காரோ மலை மாவட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. லேசான இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.