

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் திரியும் நாய்கள் மற்றும் மாடுகளால் சமீபகாலமாக நிறைய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு பரிதாபமாக மரணத்தை தழுவியவர்கள் மற்றும் மாடு தூக்கி வீசி அல்லது முட்டியதால் படுகாயம் அடைந்து வேதனைக்குள்ளாகியவர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். சமீபத்தில் கூட ராமேஸ்வரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின்னால் இருந்து வந்த மாடு தூக்கி எறிந்த காட்சி கண்டு பதைத்து மாடு என்றாலே அச்சத்தை தந்து ஒதுங்க வைக்கிறது உண்மை.
இந்த நிலையில் சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் உரிமம் மற்றும் மைக்ரோ சிப் கட்டாயமாக்கப்படுவதாக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் உரிமம் மற்றும் மைக்ரோ சிப் இல்லாத மாடுகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி வரை மாடுகளுக்கு உரிமம் பெற கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் ரூ.100 மட்டும் கட்டணமாக செலுத்தி மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறலாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செல்லப் பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்தும் வகையில் பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும், அந்த கொட்டகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயல்முறைகளுக்கும் மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 கணக்கெடுப்பின்படி சென்னையில் சுமார் 22.857 மாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்ற நிலையில் அந்த மாடுகளை வளர்ப்போரின் முறையற்ற செயல்களால் பொது மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. உதாரணமாக சாலைகளின் நடுவில் நிற்கும் மாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல், பள்ளி வேன்கள் எடுக்கும் கூடுதல் நேரம், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பெரியவர்கள் தடுமாற்றம், மாடுகள் கழியும் கழிவுகளால் சுகாதாரக் கேடு , சற்று கவனக்குறைவாக நடந்தால் சாணங்களால் வழுக்கி விழும் நிலை என பல்வேறு தர்மசங்கடங்களை மாடுகளால் அடைகிறோம். குறிப்பாக கோவில் இருக்கும் பகுதிகளில் அதிக மாடுகள் உள்ளது. இவற்றுக்கு அமாவாசை தினங்களில் மட்டும் அகத்திக்கீரையை அளித்து மேலும் சிரமம் தருகின்றனர்.
ஆகவே இது போன்று ஏற்கனவே மைக்ரோ சிப் பொருத்தாத நாய்களுக்கு ரூபாய் 5000 அபராதம் என்ற விதிமுறை இருக்கும் நிலையில் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் வண்ணம் இப்போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
இது ஒரு அரிசி தானிய அளவில் இருக்கும் மிகச்சிறிய அடையாளக் கருவி. இது விலங்கின் தோலுக்கு அடியில் (Subcutaneous) செலுத்தப்படும் ஒரு RFID (Radio Frequency Identification) சிப் ஆகும்.
இதன் முக்கிய அம்சங்கள்:
இதில் ஒரு தனித்துவமான அடையாள எண் (Unique ID Number) மட்டுமே இருக்கும்.
இதில் பேட்டரியோ அல்லது GPS வசதியோ கிடையாது (இது ஒரு Passive கருவி).
மைக்ரோ சிப்பின் பயன்கள்:
இந்த மைக்ரோ சிப்பினால் மாடு , நாய் காணாமல் போனால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர்.
கால்நடை மருத்துவமனை நகராட்சி மூலம் ஸ்கேன் செய்தால் உரிமையாளர் விபரம் உடனே தெரியும் என்பதால் யாருடைய மாடு? யாருடைய நாய்? என்ற சர்ச்சை வராது.
திருட்டு அல்லது தவறான விற்பனையும் குறையும். மேலும் எப்போது தடுப்பூசி போட்டது போன்ற விபரம், நோய் வரலாறு மற்றும் அறுவை சிகிச்சை விவரம் போன்றவைகளையும் இந்த சிப் மூலம் அறியலாம் (all linked to chip ID)
மாடுகளுக்கு காப்பீடு
இழப்பீடு போன்ற அரசுத் திட்டங்களில் பயன் பெறலாம்.குறிப்பாக மைக்ரோ சிப் நாய் மாடுகளின் வாழ்நாள் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இதனால் மாடுகளுக்கும் நாய்களுக்கும் பாதுகாப்பு மட்டுமல்ல முறையான வளர்ப்பு மற்றும் அபராதத்துக்கு பயந்து சாலைகளில் திரியவிடாமல் பயணிகளுக்கு பாதுகாப்பு போன்ற நன்மைகள் விளையும்.