கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருந்து விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம்.
மேலும் காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பாமா என்ற மருந்து நிறுவனத்திற்கு சீல் வைத்ததோடு, கோல்ட்ரிப் இருமல் மருந்தையும் தடை செய்தது மத்திய அரசு. இது தவிர மருந்து ஆலை உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.
இந்நிலையில் வலி நிவாரணி மருந்தாக பயன்படும் நிமெசுலைட் மருந்து விற்பனையைத் தடை செய்துள்ளது மத்திய சுகாதார துறை அமைச்சகம். நிமெசுலைட் மருந்தை உட்கொள்வதன் மூலம் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதன் காரணமாகவே தற்போது இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது.
கை, கால் வலி, மூட்டு வலி, காது, தொண்டை வலி மற்றும் தீவிர காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களுக்கு நிமெசுலைட் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. வலி நிவாரணியாக நிமெசுலைட் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மறுபுறம் எதிர்பாராத எதிர் விளைவுகளையும் மனிதர்களுக்கு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வயிற்றுப்போக்கு, தலைவலி, இரத்தம் உறைதல், கல்லீரல் பாதிப்பு மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே நிமெசுலைட் மருந்து தடை செய்யப்பட்டது. இந்தியாவில் இம்மருந்து ஒரு சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிமெசுலைட் மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என மதிய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் நிமெசுலைட் மருந்து உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு முழுவதுமாக தடை விதித்துள்ளது மத்திய அரசு.
மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “100 மில்லி கிராமுக்கு அதிகமான அனைத்து வகையான நிமெசுலைட் மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்ய இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. நிமெசுலைட் மருந்து மனிதர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதன் காரணமாக, இதன் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிமெசுலைட் மருந்திற்கு மாற்று மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. பொதுமக்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்று மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
1940 ஆம் ஆண்டு மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டப் பிரிவு 26ஏ இன் படி, நிமெசுலைட் மருந்தை தடை செய்ய மருத்துவ தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நிமெசுலைட் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது” என மததிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, பொதுமக்கள் நேரடியாக மருந்தகங்களில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மருத்துவரின் பரிந்துரை படியே மருந்துகளை வாங்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, அந்தந்த மாநில சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.