ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை..!
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 'தோஷகானா-2' ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டு சிறை தண்டனை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது. ஏற்கனவே மற்றொரு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இம்ரான் கான் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட பொழுது, இம்ரான் கான் மனைவிக்கு விலையுயர்ந்த 'பல்கேரி' வைர நகை செட் பரிசளிக்கப்பட்டது. அரசு விதிகளின்படி வெளிநாட்டு பயணங்களின் போது கிடைக்கும் விலையுயர்ந்த பரிசுகளை அரசு கருவூலமான 'தோஷகானா'வில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை முறையாக ஒப்படைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் தீர்ப்பு வழங்கினார்.
ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷாரூக் அர்ஜுமந்த் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இருவருக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அரசு ஊழியராக இருந்து நம்பிக்கை துரோகம் செய்ததால் சட்டத்தின் பிரிவு 409-ன் கீழ் தலா 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இம்ரான் கானின் அரசியல் எதிர்காலத்திற்கு மேலும் ஒரு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

