
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 இந்தியர்கள் இறந்து போயினர். இதற்கு பின்னர் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா அருகே வசிக்கும் சீமா ஹைதர் என்ற பெண்ணை குறி வைத்து சமூக வலைத் தளங்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது சீமா ஹைதர் வீட்டைச் சுற்றி, போராட்டங்கள் கூட நடைபெறுகின்றன.
சீமா ஹைதர் யார்?
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஜகோபாபாத்தை சேர்ந்தவர் 37 வயதான சீமா. இவருக்கு ஹைதர் என்ற கணவரும் 4 குழந்தைகளும் இருந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஆன்லைன் லூடோ விளையாட்டு விளையாடும் போது இந்தியாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். சச்சினை சந்தித்து திருமணம் செய்துக் கொள்ள சீமா முடிவெடுத்துள்ளார். பின்னர், மே 2023 இல் சீமா கராச்சியில் உள்ள தனது வீட்டை விட்டு தனது குழந்தைகளுடன் வெளியேறி, நேபாள் வழியாக இந்தியா வந்தடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் ரபுபுரா கிராமத்தில் வசித்து வரும் சச்சினை தேடி வந்துள்ளார். பிறகு சச்சினும் சீமாவும் ஒரு கோயிலில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சீமா ஹிந்து மதத்தை தழுவினார். ஜூலை மாதம் சீமாவையும் சச்சினையும் உபி காவல் துறையினர் கைது செய்த போது அவரது எல்லை தாண்டிய காதல் கதை தலைப்பு செய்தியானது.
சட்ட விரோதமாக எல்லை தாண்டிய குற்றத்தில் சீமாவும், அவருக்கு அடைக்கலம் அளித்ததற்காக சச்சினும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆயினும் அவர்கள் இருவரையும் பிணையில் விடுவித்தனர். அதன் பின்னர் புகழ்பெற்ற சீமா அடிக்கடி இந்தியாவின் சிறப்பு தினங்களில் தனது இன்ஸ்டா பக்கத்தில், இந்தியாவிற்கு ஆதரவாக வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த மார்ச் 18, 2025 அன்று சீமா - சச்சின் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, வட இந்தியாவில் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில், பலரின் கவனமும் சீமாவின் மீது திரும்பியது. இந்நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானியர்களை நாட்டை வெளியேற உத்தரவிட்டதால் சீமாவும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவாரா ? என்பது விவாதம் ஆகியுள்ளது . வழக்கமாக வீடியோ வெளியிடும் சீமா, பஹல்காம் தாக்குதலை கண்டித்து வீடியோ பதிவு செய்யாததால் சமூக ஊடகங்களில் அவர் மீது கோவம் வெளிப்படுத்தப்பட்டது.
தற்போது சீமா ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடம் முறையிடுவது போல இருந்தது. "நான் இந்தியாவில் தங்களிடத்தில் அடைக்கலமாக வந்துள்ளேன், நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன், ஆனால் இப்போது இந்தியாவின் மருமகள் ஆகி விட்டேன். தயவு செய்து என்னை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்" என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சீமாவின் விஷயத்தில் அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.