

‘பான் கார்டு’ (PAN Card - Permanent Account Number) என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். இது வரி செலுத்துதல், வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் பெரிய நிதி பரிவர்த்தனை மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் வரிக்கு உட்பட்ட வருமானம் சம்பாதிக்கும் தனிநபர்களுக்கு ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும்.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய திருத்த சட்டத்தின்படி, ஏப்ரல் 1 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள திருத்தச்சட்டம் கீழ், ஒரு குடிமகனின் அங்கீகாரத்துக்கு பிறப்பு சான்றிதழே ஒற்றை ஆவணமாக இனிமேல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது பான் கார்டு விண்ணப்பங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புதிய ‘பான் கார்டு’ கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழை இணைப்பது கட்டாயமாகும்.
உங்களின் ஆதார் அட்டையில் பிறந்த தேதி இருந்தாலும், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்பு சான்றிதழ் கூடுதல் ஆதாரமாக கேட்கப்படும். அதேபோல் ஏற்கனவே 2023-ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்களுக்கு, அரசு வழங்கிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் அவர்களுக்க பான் கார்டு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நடைமுறையே இனி அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் பான் கார்டில் உள்ள பெயரானது ஆதார் கார்டில் உள்ள விவரங்களுடன் துல்லியமாக ஒத்துப்போக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது பான் கார்டில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் 100% ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய இனிஷியல் மாற்றம் அல்லது எழுத்துப்பிழை இருந்தாலும் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.
ஏற்கனவே பார் கார்டு வைத்திருப்பவர்கள், இதில் பிறந்ததேதி அல்து பெயரை மாற்ற விரும்பினால் இனிமேல் கட்டாயம் பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒரே நபர் பல்வேறு பெயர்களில் அல்லது தவறான பிறந்த தேதிகளை கொடுத்து பல பான் கார்டுகளை பெறுவதை தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதேபோல் பான் கார்டு விண்ணப்பங்களுக்கான புதிய படிவங்களை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய 49A/49AA படிவங்களுக்குப் பதிலாக, இந்தியர்களுக்கு படிவம் 93 (Form 93) மற்றும் வெளிநாட்டினருக்கு படிவம் 95 (Form 95) பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆதார் மற்றும் பிற ஆவணங்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய விதிகள்:
புதிய படிவங்கள்: இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இப்போது படிவம் 93-ஐ நிரப்ப வேண்டும்.
வெளிநாட்டினர்: வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் படிவம் 95-ஐப் பயன்படுத்த வேண்டும்.
ஆதார் இணைப்பு: ஆதார் அட்டை விவரங்களின்படி பான் கார்டில் பெயர் மற்றும் பிற விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
பழைய படிவங்கள்: ஏப்ரல் 1 முதல் பழைய படிவங்கள் (49A/49AA) ஏற்றுக்கொள்ளப்படாது.
திருத்தம்: பான் கார்டு திருத்தம் கோரும்போது, தற்போதைய பான் கார்டு நகலை இணைக்க வேண்டும், தொலைந்து போயிருந்தால் FIR நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய படிவங்களை வருமான வரித்துறை இணையதளத்தில் ஆன்லைனில் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்யலாம். அதாவது இணையவழி விண்ணப்பத்தை, Protean-இன் (முன்னர் NSDL eGov) இணையதளம் (https://onlineservices.proteantech.in/paam/endUserRegisterContact.html) மூலமாகவே அல்லது வருமான வரி மின்-தாக்கல் இணையதளம் (https://www.pan.utiitsl.com/PAN/) வாயிலாக 'Instant E-PAN' மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.