ரஷ்யாவில் கொரோனா போலவே ஒரு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ரஷ்ய மக்களிடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொற்று கொரோனா. ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை, பெரும் அளவில் பலி எண்ணிக்கை என அனைத்துவிதத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாவால் உலக நாடுகள் பெரும் அவதிக்குள்ளாகின. சில வெளிநாடுகளில் கொத்து கொத்தாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
இந்தியாவில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த கொரோனா. அந்தளவுக்கு பெரிய அழிவரக்கனாக விளங்கிய கொரோனா மீண்டும் 27 நாடுகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எக்ஸ்இசி (XEC) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தியாது. முதன்முதலில் இந்த கொரோனா ஜுன் மாதத்தில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருந்தது. ஆனால் அதன்பின்னர் படிப்படியாக குறைந்துவிட்டது. இது பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை.
இதேபோன்ற ஒரு தொற்றுதான் தற்போது ரஷ்யாவில் பரவி வருகிறது. இந்த தொற்று பரவுவோருக்கு காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகியவை அறிகுறிகளாக இருக்கின்றன. மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் பத்து நாட்களுக்கு மேல் படுத்த படுக்கையாக ஆகிவிடுகின்றனர். இதனை ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
ஆனால், இதனை ரஷ்ய மருத்துவர்கள் முற்றிலும் மறுத்துள்ளனர். அதாவது மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய் தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர். மேலும் சுவாசக் குழாய் தொற்று என்றும், அதன் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனே தீவிர சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் இந்த புதுவகை தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.