திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சனி பகவான் காகத்தின் மீது அமர்ந்து காட்சித் தருகிறார். அதே நேரத்தில் கையில் மற்றொரு காகத்தையும் ஏந்தி உள்ளார்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் குருபகவானும் சனி பகவானும் மட்டுமே உள்ளனர். வேறு கிரகங்கள் இல்லை.
முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் வார்த்தலையில் தரை மட்டத்திலிருந்து முப்பது அடி உயரத்தில் கருவறைக்குள் பாதாளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு சனி பகவான் காக வாகனத்துடன் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.
மன்னார்குடி அருகே திரு ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கும் விநாயக பெருமானுக்கும் நடுவில் சனி பகவான் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
அரக்கோணம் மங்கம்மா பேட்டையில் சனி பகவான் மனைவி நீலாதேவியை மடியில் அமர்த்தி கல்யாண சனீஸ்வரராக அருள் பாலிக்கிறார்.
தஞ்சாவூர் அருகே ரங்கராஜபுரம் என்னுமிடத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் பர்வதவர்த்தினி சமேத ராமநாதர் கோவில் அமைந்துள்ளது. சனி பகவான் இரு மனைவிகளான மந்தாதேவியுடனும் ஜேஷ்டா தேவியிடனும் குளிகன் மாந்திகன் இரு மகன்களோடும் குடும்பத்தோடு காட்சி அளிக்கிறார். இங்கு மூலவருக்கு கொடிமரம் இல்லை. ஆனால் சனீஸ்வரருக்கு உள்ளது.
நெல்லை அருகே உள்ள இலத்தூர் மதுர நாதசுவாமி கோவிலில் அபயஹஸ்த நிலையில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட காரிய தடை /தாமதம் நீங்கும்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் குச்சனூர் சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பூமியிலிருந்து தோன்றியவருக்கு மஞ்சள் காப்பு சாத்தப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் தனி கோவிலில் மூலவராக ஆறு கண்களை உடையவராக லிங்க வடிவ சுயம்பு மூர்த்தியாக திருநீறும் நாமமும் அணிந்து சிறப்புடன் காட்சி தருகிறார்.
கும்பகோணம் மேல காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் அனுமன் சனி பகவானை தன் காலின் அடியில் அழுத்தி மிதித்தபடி அருள் புரிகிறார்.
கும்பகோணம் திருவாரூர் வழியில் நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள திருநறையூரில் ராமநாதசுவாமி கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் மந்தா தேவி ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியருடனும் மற்றும் பிள்ளைகளுடனும் தரிசனம் தருகிறார்.
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் சனி பகவான் நின்ற நிலையில் ஒருவராக தனி சன்னதியில் காட்சி தருகிறார் .
சனி பகவானுக்கு உகந்தது எள். எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெயில் தீபமேற்றி சனி பகவானை வழிபாடு நடத்த வேண்டும். எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையால் ஏற்றப்படும் தீபத்துக்கு சக்தி அதிகம். சனிக்கிழமைகளில் எள் கலந்த சாதம் வைத்து காகத்திற்கு உணவாக படைக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வமாலை சாற்றினால் சனீஸ்வரன் மகிழ்ந்து அருள் புரிவார். வன்னி மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால் சனி தோஷத்தின் தாக்கம் குறையும்.