பெற்றோர்களே உஷார்..! இந்த 2 நாட்கள் பிள்ளைகளை தனிமையில் விடாதீர்கள்..!

CHILDRENS FEAR
CHILDRENS FEAR AI
Updated on

பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த முறை தேர்தலில் குழந்தைகள் கருத்து கேட்டு அவர்கள் சொல்படி ஓட்டுப் போட்டவர்கள் நிறைய பேர்.

இந்நிலையில் தேர்தல் முடிவு நாள் அரசியல் ஆர்வம் உள்ள வயது வந்தவர்களின் “கொண்டாட்ட நாள்” என்றாலும், அது குழந்தைகளுக்கு ஆபத்தான சூழலாக மாறாமல் இருக்கவும் குழந்தைகள் மனநலம் மற்றும் பாதுகாப்பைப் பேணவும் விழிப்புணர்வு பெறவும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (TNSCPCR) பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குழந்தைகள் குழப்பத்துடன் தவறான முடிவுகள் எடுப்பதைத் தடுக்க கவனமாக இருக்கவும், அரசியல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அல்லது தேர்வு முடிவுகள் தாங்கள்எதிர்பார்த்தபடி அமையவில்லையானால் மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும். அத்தகைய தருணங்களில் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, முடிவுகள் வெளியாகும் நாட்களில் அவர்களைத் தனிமையில் விடுவதைத் தவிர்த்து பெற்றோர்கள் அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப் பெற்றோர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் குழந்தைகளின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ அல்லது அவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தாலோ, அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவசர கால உதவிகள் அல்லது ஆலோசனைகள் தேவைப்பட்டால், குழந்தை பாதுகாப்புக்கான மத்திய அரசின் இலவச உதவி எண்ணான 1098-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவுறுத்தல்களில் குழந்தைகளை தேர்தல் பிரசாரம், அரசியல் ஆதாயம் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் கோடை வெயில் மற்றும் தேவையற்ற இடங்களுக்குக் குழந்தைகள் செல்வதைத் தவிர்க்கவும், நீர்நிலைகளுக்குப் போவதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளை அரசியல் கொண்டாட்டங்களில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் வெற்றி ஊர்வலம், பட்டாசு வெடித்தல், கூட்ட நெரிசல் போன்றவற்றில் குழந்தைகளைச் சேர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்தல் முடிவு நாளில் சில இடங்களில் கொண்டாட்டம் காரணமாக கலவரம் ஏற்படும் வாய்ப்பு இருக்கலாம். அதில் குழந்தைகள் இருப்பது ஆபத்து மற்றும் சாலைகளில் நடைபெறும்.

வெற்றி ஊர்வலங்கள் காரணமாக போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் கூட்ட நெரிசலில் மாட்டுவதைத் தவிர்க்க குழந்தைகள் தனியாக வெளியே செல்ல விடக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக தற்போது எதையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் சமூக ஊடகங்கள் தரும் தவறான தகவல்கள், தூண்டுதல் உள்ளடக்கம் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இணையத்தில் குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர் கண்காணிப்பு அவசியம் தேவை. அது மட்டுமல்ல அந்த நாளில் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களை மனரீதியாகத் தூண்டி, அவர்களைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய செயலாகும். அரசியல் மாற்றங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளால் குழந்தைகள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதை உறுதி செய்வது பெற்றோரின் கடமையாகும்.

குழந்தைகளின் உயிரையும், எதிர்காலத்தையும் காப்பது நமது சமூகக் கடமை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல குழந்தைகளுக்கு நல்லது சொல்லி வழிகாட்டியாக இருப்பதும் தற்போது அவசியம்.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் மெகா ஆன்மீக பயணம்.! அடுத்து செல்லப் போகும் இடம் இதுவா.? உடைந்தது ரகசியம்.!
CHILDRENS FEAR
logo
Kalki Online
kalkionline.com