

தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வருகின்ற மே 4-ம் தேதி வெளியாக உள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக நேற்று முன்தினம் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான முடிவுகள் திமுகவுக்கை சாதகமாக இருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவில் திமுகவிற்கு ஆட்சி அமைக்க அதிக பலம் கிடைக்காமல் போனால், அதிமுகவும் தவெக-வும் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை அதிகாலை 5 மணிக்கு வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார்.
தவெக-வின் தலைமை அலுவலகமான பனையூரில், நேற்று தலைவர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெறும் வேட்பாளர்கள், எந்நேரம் ஆனாலும் பனையூருக்கு வரவேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என விஜய் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, திருச்செந்தூர் முருகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், நாளை அதிகாலை 5 மணிக்கு வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற உள்ள சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க இருக்கிறார்.
இதற்காக இன்று இரவே விஜய் வேளாங்கண்ணிக்கு புறப்பட இருக்கிறார். வேளாங்கண்ணியில் ஒரு சொகுசு ஹோட்டலில் இன்று இரவு அவர் தங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
வேளாங்கண்ணியின் சிறப்பு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, அடுத்ததாக நாகூர் தர்காவில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்க இருக்கிறார் விஜய்.
இந்து கோயிலுக்கு சென்ற விஜய், நாளை கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் ஆலயங்களுக்கும் செல்ல இருப்பதால், தான் ஒரு மதச்சார்பின்மை அற்ற தலைவர் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்ட முயல்கிறார்.