
அரசுக்கு வருவாய் கொடுப்பதில் பொது மக்களின் சொத்து வரி முக்கிய பங்கினை வகிக்கிறது. அந்த சொத்து வரியை வசூலிக்க அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வருடமும் படாத பாடு பட்டுவருகின்றனர்.
அதே போன்று அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை படிக்க அனுப்பும் ஆர்வமும் பெற்றோரிடையே வெகுவாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் அதிகமான பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆங்கில வழி தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் நான்கு கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாகங்கள், இப்பிரச்னைக்கு புதிய தீர்வு கண்டுள்ளன. இதன்படி புல்தானா மாவட்டத்தில் உள்ள பட்காவ், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிகாலி, பாலேகுல், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவாலே ஆகிய கிராமங்களில் செயல்படும் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் பெற்றோரின் சொத்து வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இத்திட்டத்தை பட்காவ் பஞ்சாயத்துதான் தொடங்கி வைத்தது. அதனை தொடர்ந்து மற்ற பஞ்சாயத்துகள் இதனை செயல்படுத்த ஆரம்பித்தன. இது குறித்து பட்காவ் பஞ்சாயத்து தலைவர் கூறுகையில்,'' எங்களது கிராமத்தில் உள்ள 7வது வகுப்பு வரையிலான பள்ளியில் வெறும் 29 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதே நிலை நீடித்தால் அரசு பள்ளியை மூடவேண்டிய நிலை வரும். இதனால் ஏழை மாணவர்களால் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலை ஏற்படும். இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோரின் சொத்து வரி, தண்ணீர் வரியை ரத்து செய்ய பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இப்போது அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது'' என்றார்.
சிகாலி கிராம பஞ்சாயத்து தலைவர் இது குறித்து கூறுகையில்,''எங்களது கிராமத்தில் 4 தனியார் பள்ளிகள் இருக்கிறது. இதனால் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளின் பெற்றோரின் சொத்து வரியை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார். இதனால் இக்கிராமத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறார்கள்.
இதே போன்று நமது மாநிலத்திலும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தினால் அரசுப்பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என சமூக ஆர்வர்கள் கருதுகின்றனர்.