அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறையை சமாளிக்க, புதிய கட்டிடங்களுக்கான கார் நிறுத்துமிட விதிகளை அரசு கடுமையாக்க உள்ளது. இனி ஒரு சிறிய வீடு கட்டுபவர்களும் கூட, தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவுக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு மட்டுமே கார் நிறுத்துமிடம் கட்டாயம். ஆனால், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கூட வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல வீடுகளுக்கு வெளியேயும், சாலைகளின் ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. அவசர கால வாகனங்கள் செல்வதிலும், நடப்பதிலும் சிரமங்கள் எழுகின்றன.
700 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு கொண்ட வீடுகளுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுவது கிடையாது. இதனால், அந்த வீட்டார்களின் வாகனம் சாலையில் நிறுத்தப்படுகிறது. அதேபோல், சொந்த நிலத்தில் வீடு கட்டுபவர்கள், அவ்விடத்தில் முழுவதுமாக வீட்டு பணியையே செய்கிறார்களே தவிர, வாகனத்திற்கென்று இடம் ஒதுக்குவது இல்லை.
இந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு, கட்டிட அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகளில் கார் நிறுத்துமிட வசதியை சேர்ப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி, குறைந்த பரப்பளவில் கட்டப்படும் வீடுகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் கார் நிறுத்துமிடம் கட்டாயமாக்கப்படும்.
அதாவது அடுக்குமாடி குடியிருப்பு பொறுத்தமட்டில், ஒவ்வொரு 750 சதூர அடிக்கும் ஒரு கார் நிறுத்துமிடமும் 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் அவசியம். இதுகுறித்து வரைபடத்தில் குறிப்பிட்டால் மட்டுமே திட்டத்திற்கான அனுமதி கிடைக்குமாம்.
வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் கட்டிடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப, தேவையான வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வரலாம்.
அதேபோல், முழு பரப்பளவையும் வாகன நிறுத்துமிடமாக மாற்றுபவர்கள், வாடகை வாங்கிக்கொண்டு வாகனம் நிறுத்த அனுமதிக்கலாம்.
இந்த புதிய விதிமுறைகள், நகர திட்டமிடல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கட்டிட அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.
இந்த நடவடிக்கை மூலம், சாலைகளில் தேவையற்ற நெரிசல்கள் குறைக்கப்பட்டு, போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இது அமையும் என்று நகரவாசிகள் நம்புகின்றனர். இந்த புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.