
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் கூறி இருந்தனர். இந்நிலையில் குரூப்4 வினாத்தாளுக்கான விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், வனக்காப்பாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25 இல் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. தேர்வர்கள் விண்ணப்பிக்க மே 24 வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதன்படி குரூப்4 தேர்வுக்கு 13 இலட்சத்து 89 ஆயிரத்து 743 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5 பேரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது.
தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு வெளியானதும், ஜூலை 12 இல் 11 இலட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் குரூப்4 தேர்வை எழுதினர். தேர்வு கடினமாக இருந்ததால், கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருக்கும் என்றே தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். குரூப்4 முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தேர்வு முடிந்த அன்றே டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வினாத்தாளுக்கான விடைக்குறிப்பகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், கருத்து தெரிவிக்கும் வசதியும் இணையதளத்தில் உள்ளது. இதன்படி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் தேர்வர்கள் தங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கலாம்.
தேர்வர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனையை டிஎன்பிஎஸ்சி பரிசீலனை செய்யும். அதன்பிறகு இறுதியான விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைக்குறிப்பு வெளியாவதற்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப்4 விடைத்தாள் கட்டுகள் பெட்டியிலிருந்து பிரிக்கப்பட்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த வதந்திகள் முற்றிலும் தவறானவை என டிஎன்பிஎஸ்சி இன்று காலை தெரிவித்தது. தேர்வர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்ட ட்ரங்க் பெட்டியில் பாதுகாப்பாகத் தான் எடுத்துச் செல்லப்பட்டன என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
மேலும் வினாத்தாள் பிரிக்கப்பட்டது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.