

"சம வேலைக்குச் சம ஊதியம்" என்ற அடிப்படையில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
துவக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. முன்பு ரூ.7,700-லிருந்து ரூ.10,000 ஆகவும், பின்னர் ஜனவரி 2024-ல் ரூ.10,000-லிருந்து ரூ.12,500 ஆகவும் உயர்த்தப்பட்டது, மேலும் அமைச்சர் ரூ.2,500 ஊதிய உயர்வு மற்றும் காப்பீட்டு வசதி அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசாணை வெளியிடப்படாத காரணத்தினால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு வரலாறு (2012 - 2024)
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் கடந்த காலங்களில் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்துள்ளது:
2012: பணியில் சேரும்போது - ₹5,000
2014: ₹2,000 உயர்வுடன் - ₹7,000
2017: ₹700 உயர்வுடன் - ₹7,700
2021: ₹2,300 உயர்வுடன் - ₹10,000
2024 (ஜனவரி): ₹2,500 உயர்வுடன் - ₹12,500
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த பணி நிரந்தரம் குறித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது ஆசிரியர்களின் முக்கிய வருத்தமாக இருந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக சட்டமன்ற பொதுத் தேர்தலில் பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர்தான் முதன்முதலில் சம்பள உயர்வாக 2,500 ரூபாய் அறிவித்து 2024ஆம் ஆண்டில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் சம்பளம் 12,500 ரூபாய் கிடைத்தாலும் இது குறைவானது என்றும் மே மாதம் சம்பளம், போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவைகளும் வழங்கவில்லை என்றும் ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி மரணம் அடைந்தால் நிவாரணம் என எவ்வித அரசு சலுகைகளும் இல்லாமல் இந்த சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரம் பெறும் நிலையில் ஆதங்கத்துடன் போராட துவங்கினர் பகுதிநேர ஆசிரியர்கள்.
போராட்டம் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்திருந்த ரூ.2,500 ஊதிய உயர்வு மற்றும் ரூ.10 லட்சம் காப்பீட்டு வசதிகள் குறித்த அரசாணைகள் (GO) இன்னும் வெளியிடப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் பெறும் ரூ.12,500 சம்பளத்தை ரூ.10,000 மற்றும் ரூ.2,500 என தனித்தனியாக பெறுவதால் நிதிச் சுமை ஏற்படுவதாகவும், இதை ஒரே தொகுப்பூதியமாக மாற்றவும், பணி நிரந்தரம் செய்யவும் கோரிக்கை விடுத்து பெரும் போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆசிரியர்களின் சம்பளத்தை ரூபாய் 12,500 இல் இருந்து ரூபாய் 15,000 ஆக உயர்வு உயர்த்தியும் மே மாதம் ரூபாய் 10.000 வழங்கப்படும் என்ற கூடுதல் செய்தியையும் தந்து ஆசிரியர்கள் மனதில் அமைதியை வரவழைத்துள்ளார்
ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.